கொரோனா போன்று மற்றொரு தொற்று நோய்: சாத்தன்குளம் சம்பவம் குறித்து நீதிமன்றம் கருத்து

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் டார்ச்சர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்பி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சற்றுமுன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதனை அடுத்து நீதிபதிகள் கருத்து கூறிய போது ’காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு தொற்று நோய் என்றும், தந்தை மகன் இறந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்தனர்

மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உள்ள பதிவேடுகள் வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்