Download App

Seema Raja Review

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் பட்டியலை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் பிரமாண்டமான புரமோஷன், டீசர், டிரைலரால் நல்ல எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தின்' விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்.

சிங்கம்பட்டி, புளியம்பட்டி என இரண்டு பக்கத்து பக்கத்து ஊர்கள். சிங்கம்பட்டி அரச பரம்பரையை சேர்ந்த ராஜா தான் நெப்போலியன், அவருடைய மகன் சிவகார்த்திகேயனும் ராஜாதான். புளியம்பட்டியில் பெரிய புள்ளி லால் மற்றும் அவருடைய மனைவி சிம்ரன். இருவரும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி அதில் காற்றாலை மின்சாரம் கொண்டு வந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். 

இரண்டு ஊர்களுக்கும் காலங்காலமாக ஒரு மார்க்கெட்டை கைப்பற்றுவதில் பகை. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்பவர்களை கட்டி வைத்து அடிப்பார்கள். இந்த நிலையில் புளியம்பட்டியை சேர்ந்த சமந்தாவை சிங்கம்பட்டி ராஜா சிவகார்த்திகேயன் காதலிக்கின்றார். இந்த காதலுக்கு சமந்தாவின் வளர்ப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தாலும் சமந்தாவின் உண்மையான தந்தை லால் எதிர்க்கின்றார். இந்த நிலையில் ஊர்மக்களை ஏமாற்றி, விவசாய நிலத்தை பிடுங்கி வாழும் லாலிடம் இருந்து சிவகார்த்திகேயன் மக்களை காப்பாற்றினாரா? சமந்தாவை கைப்பிடித்தாரா? என்பதுதான் கதை

சிவகார்த்திகேயன் வழக்கம்போல் காதல், காமெடி, ஆவேசம், ஆக்சன் என ஒரே படத்தில் அனைத்து வகை நடிப்பையும் தந்துள்ளார். ஆனால் காமெடி வந்த அளவுக்கு மற்றவை வரவில்லை என்பது வருத்தமே. ஆக்சன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 

படம் முழுவதும் பாவாடை தாவணியில் வரும் சமந்தா செம அழகு. அவருடைய இயல்பான நடிப்பு அழகுக்கு அழகு சேர்க்கின்றது. இந்த படத்திற்காக சமந்தா ஆறுமாத காலம் சிலம்பம் கற்றாராம். படத்தில் ஆறு நிமிடம் கூட சிலம்ப காட்சி வரவில்லை. சூரியின் டைமிங் காமெடி ஒருசில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றது. சிக்ஸ்பேக் கெட்டப்பை சிவகார்த்திகேயனே கலாய்த்துவிட்டதால் நாம் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

சீரியல்களில் வரும் வில்லிகளின் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார் சிம்ரன். லால் மற்றும் நெப்போலியன் நடிப்பில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. மொட்டை ராஜேந்திரன் வரும் சில நிமிடங்கள் நல்ல கலகலப்பு.

டி.இமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகம். அதேபோல் மண்ணின் மணத்துடன் கூடிய கேமிரா அருமை. படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 

இயக்குனர் பொன்ராம், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' என இரண்டு முழுநீள காமெடி படத்தை கதையுடன் ரசிக்கும்படி கொடுத்த இயக்குனர். இந்த படத்தில் முதல்பாதியில் கதை என்னவென்றே அவர் கூறவில்லை. இரண்டாம் பாதியிலும் சொல்ல வந்ததை விஷயத்தை ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் சொல்லிவிட்டு முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அந்த காமெடியும் எடுபடாமல் போனது துரதிஷ்டமே. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் 'பாகுபலி'க்கு இணையான போர்க்காட்சிகள் என்ற விளம்பரம் தேவையா? என்ற அளவுக்கு இருந்தது அந்த போர்க்காட்சிகளின் கிராபிக்ஸ். 

ஒரு படத்தின் வில்லன் கேரக்டர் வெயிட்டாக இருந்தால் தான் ஹீரோவுக்கு வேலை இருக்கும். இந்த படத்தில் வில்லனும் காமெடியன் போல் இருப்பதால் சீரியஸ் காட்சி எது? சிரிப்பு காட்சி எது? என்பதில் குழப்பம் வருகிறது. நிகழ்கால பிரச்சனைகளான விவசாயி, நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றை இயக்குனர்.படத்தில் வலிய திணித்துள்ளதால் எடுபடாமல் போகிறது. 'தல'க்கே தலைப்பிள்ளை பெண்பிள்ளை தான் உள்பட ஒருசில 'தல' வசனங்கள் அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் தந்திரமாக இருக்கலாம். அதேபோல் காதலியை கடத்த சிறுத்தை தந்திரத்தை கடைபிடிப்பதெல்லாம் ஆதிகாலத்து கற்பனை. உண்மையான சிறுத்தை அந்த காட்சியில் வரும் என்பதை சின்னக்குழந்தைகூட ஊகித்துவிடும். சிறுத்தையிடம் சூரி மாட்டிக்கொள்ளும் காமெடியும் எடுபடவில்லை.

மாஸ் நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணையும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைத்தும் அதை வீணாக்கியுள்ளார் இயக்குனர் என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் சீமராஜா, சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும் 'சிங்க ராஜா' மற்றவர்களுக்கு 'சுமாரான ராஜா'.
 

Rating : 2.8 / 5.0