அனிதா தங்கையா? தலித்தா? ரஞ்சித்துக்கு சீமான் கேள்வி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

சமீபத்தில் இயக்குனர் சங்கம் நடத்திய அனிதாவின் நிகழ்வேந்தல் நிகழ்ச்சியில் இயக்குனர் அமீருக்கும், இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஜாதி, தமிழ் குறித்து காரசாரமான விவாதம் நடந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து கருத்தும் வாழ்த்தும் கூறி ரஞ்சித்தின் கண்டனத்தை எஸ்.வி.சேகர் பெற்றுக்கொண்டதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரஞ்சித்தின் கருத்து குறித்து இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான் கூறியபோது, ''ரஞ்சித் கோபம் நியாயமானது. அவர் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. ரஞ்சித் சொல்கிற வேதனையும், காயங்களும் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காக வெட்கித் தலைகுனிகிறோம். புரையோடிப்போன சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார். இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள்தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம். இந்த உணர்வைதான் ஊட்டி வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்'' என்று கூறினார்.