close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' இன்னொரு பாகுபலியா?

Monday, September 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24ஏஎம் ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த 'சீமராஜா' விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

டிரைலர் ரிலீஸ் விழாவில் நாயகி சமந்தா பேசியபோது, 'ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் டி.இமான் பேசியபோது, 'இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி என்றார்

நடிகர் சூரி பேசியபோது, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும். அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன்

நடிகை சிம்ரன் பேசியபோது, 'பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது என்று கூறினார்.

இயக்குனர் பொன்ராம் பேசியபோது, 'காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார்

இறுதியாக நாயகன் சிவகார்த்திகேயன் பேசியபோது, 'இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.