சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ள கொரோனா: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,April 26 2020]

கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையும், அப்படியே கிடைத்தாலும் காலைக்காட்சி மட்டுமே கிடைக்கும் நிலையும் இருந்தது. இதனால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தும் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். சின்ன பட்ஜெட் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடினாலும், மாஸ் நடிகர்களின் படம் ரிலீஸ் என்றால் அந்த படத்தை தூக்கும் அவலமும் பல நேரங்களில் நடந்துள்ளது.

இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே OTT பிளாட்பார்ம் சின்னபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுத்துள்ளது. எந்தவித டென்ஷனும் இல்லாமல் வசூல் பற்றிய கவலை இல்லாமல் ரிலீசுக்கு முன்னரே மொத்த காசையும் வாங்கிவிட்டு ஆன்லைனில் OTT பிளாட்பார்மில் தயாரிப்பாளர்கள் விற்பனை செய்து லாபம் பார்க்கும் நேரம் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. சூர்யா ஆரம்பித்து வைத்த இந்த வியாபாரத்தை இன்னும் பல தயாரிப்பாளர்கள் பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: OTT இது விஞ்ஞான மாற்றம் இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா.
சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம். நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும். தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமத்தில் தியேட்டர்கள் எதிர்காலத்தில் கண்காட்சி பொருளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.