மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்!

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லியில் காலமானார்.அவருக்கு வயது 95.

வயோதிகம் மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மற்றும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ராம்ஜெத் மலானி இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு நாட்டின் முக்கிய அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராம்ஜெத்மலானியின் இறுதிச் சடங்கு இன்று மாலை டெல்லியில் லோதி மயானத்தில் நடைபெறும் என்று அவரது மகன் மகேஷ் மலானி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அதாவது வரும் 14-ம் தேதி ராம் ஜெத்மலானியின் 96-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ஹவாலா வழக்கு, கனிமொழியின் 2 ஜி வழக்கு, .ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளான 7 தமிழர்கள் வழக்கு ஆகியவை இவர் வாதாடிய சில முக்கிய வழக்குகள் ஆகும்.

13 வயதில் பள்ளிப்படிப்பு, 17 வயதில் சட்டப்படிப்பை முடித்த ராம்ஜெத்மலானி 18 வயதிலேயே வழக்கறிஞரானார். அந்தக் காலத்தில் 21 வயதில்தான் வழக்கறிஞராக முடியும். ஆனால் ராம்ஜெத் மலானிக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் 18 வயதிலேயே வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டது.

பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ராம்ஜெத்மலானி அதன்பின் வாஜ்பாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். அதன்பின் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்து ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.