சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அதிபர்… அமெரிக்க அரசியலில் நடக்கும் பரபரப்பு சம்பவம்!!!

 

நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற விருக்கிறது. இத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அமெரிக்காவில் தற்போது களைக் கட்டியிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையேயும் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்பிரச்சாரத்தில் இருகட்சி வேட்பாளர்களும் தொடர்ந்து அடுத்தவர்களை குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படி அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்ட பயன்படுத்திய ஒரு வீடியோ அவருக்கு எதிராகவே கிளம்பும் என அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. இச்சம்பவத்தால் அதிபர் மீது சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

பிரச்சாரத்தின் போது அதிபர் ட்ரம்ப் ஒரு வீடியோவை ஒளிபரப்பி அதன் மூலம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோபிடன் மீது சரமாரியாகக் குற்றம் சாட்டத் தொடங்கினார். அந்த வீடியோவில் “ஒரு பெண் தனது வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது ஒரு திருடன் அந்த வீட்டில் நுழைகிறான். பயந்துபோன அப்பெண் தொலைபேசி வழியாக காவல் துறையினரை உதவிக்கு அழைக்கிறார். ஆனால் தொலைபேசியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கம்பியூட்டர் வாய்ஸ் மட்டுமே கேட்கிறது. இதனால் அப்பெண் நிலைக்குலைந்து போகிறாள்” இப்படி ஓடிக்கொண்டிருந்த அந்த வீடியோவைப் பார்த்து அதிபர் ட்ரம்ப், பார்த்தீர்களா? ஜோபிடன் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும். மக்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். யாரும் உதவி செய்ய இருக்கமாட்டார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்தப் பிரச்சாரம் தற்போது சமூக வலைத்தளம் முதற்கொண்டு ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இச்சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் பலரும் இந்த வீடியோ வெளியாகி இருப்பது டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு வகிக்கும் குடியரசு கட்சி ஆட்சியில். இவருடைய ஆட்சி இப்படித்தான் இருக்கிறது என்பதை அவரே வீடியோ போட்டு காட்டியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒரு பிரச்சாரத்திற்கு ஒரு வீடியோவை பயன்படுத்தியது குற்றமா என சமூக வலைத்தளங்களில் அதிபரைக் குறித்து சிலர் கிண்டலடிக்கவும் தொடங்கிவிட்டனர்.