கவுசல்யாவின் கணவர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 01 2019]

உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் கணவர் சங்கரை பறிகொடுத்த கவுசல்யா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற பறை இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு புரட்சிகரமான திருமணமாக கருதப்பட்டது.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் சக்தி மீது பாலியல் புகார்கள் உள்பட பல அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. அவர் ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டதாகவும், அவர் நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற பெயரைப் பயன்படுத்தி, தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், திருநங்கை உள்பட ஒருசில பெண்கள் சக்தி மீது பாலியல் புகார் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த புகார்கள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி 'சக்தி பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நிமிர்வு கலையகத்தில் இருந்து சக்தி வெளியேற வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திவிட்டு அடுத்த 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் சக்தி பறை இசைக்கக் கூடாது என்றும் முடிவு செய்தனர்.

ஆணவக்கொலை செய்ததற்காக பெற்ற தாய், தந்தைக்கே தண்டனை வாங்கி தந்து புரட்சி செய்ததாக கருதப்படும் கவுசல்யா, இரண்டாவது கணவரை தேர்வு செய்ததில் தவறு செய்துவிட்டாரோ என்று நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.