வெங்காயத்தால் வந்த வினை… புதிய தொற்றுநோயால் அச்சம்!

  • IndiaGlitz, [Saturday,October 23 2021]

அமெரிக்காவில் வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா எனும் நோய் கடந்த 2 மாதங்களாக பரவிவருகிறது. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படுத்தாத இந்த நோயால் மக்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெங்காயத்திலுள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் சால்மோனெல்லா எனும் தொற்றுநோய் தற்போது அமெரிக்காவிலுள்ள 37 மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 650க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 129 பேர் இதற்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெக்சாஸ் மற்றும் ஒக்லஹோமா மாகாணங்களில் இந்த நோய்த்தொற்று அதிகளவில் பரவிவருவதும் குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவின் சிவாவா எனும் இடத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள், சிவப்பு, வெள்ளை வெங்காயத்தால் தற்போது புதிய நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்து புரோக்சோர் இன்க் மூலம் விநியோகம் செய்யப்பட்ட வெங்காயத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்து வருகிறது.

மேலும் இந்த சால்மோனெல்லா நோய்த்தொற்று இரப்பையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கை இது உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட ஒரு நபருக்கு 6 மணிநேரத்தில் இருந்து 6 நாட்கள் வரை அறிகுறிகளை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது.