close
Choose your channels

பொங்கல் பண்டிகையில் பெண்களை மகிழ்விக்கும் பட்டுப் புடவைகள்

Sunday, January 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொங்கல் பண்டிகையில் பெண்களை மகிழ்விக்கும் பட்டுப் புடவைகள்

 

இந்தியப் பண்பாட்டில் புடவை சிறப்பான உடையாகக் கருதப்படுகிறது. நாகரிக காலக்கட்டத்தில் நவீன உடைகளுக்கு மாறின பெண்களும் பண்டிகை நாட்களில் புடவைகளை உடுத்தித் தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில், சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். புத்தாடைகள் இல்லாத பண்டிகைகளை நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுவும் பொங்கல் பண்டிகையில் பெண்கள் பட்டுப் புடவைகளை உடுத்தித் தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவிற்கு அடுத்தப் படியாக இந்தியாவில்தான் பட்டுத் தொழில் சிறந்து விளங்குகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் பட்டு வகையானது அது நெய்யப்படும் ஊர்களின் பெயர்களை வைத்தே அறியப்படுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாபுரம், திருபுவனம் போன்ற பகுதிகளில் நெய்யப்படும் பட்டு வகைகள் தரமுடையதாகக் கருதப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் பனாரஸ், சந்தேரி, உப்படா போன்ற வேறு ரகங்களும் மிகவும் பிரபலம்.

பட்டுச் சேலைகளைத் தேர்வு செய்யும் விதம்

ரகம், புதுமையை வைத்தே பட்டுப் புடவைகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது. சில நேரங்களில்  உடுத்த வேண்டிய சூழலைப் பொறுத்தும் பட்டுப் புடவையைத் தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே பட்டினைத் தேர்வினைச் செய்வதில் எப்போதும் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்.

பட்டுப் புடவையினை வாங்கும்போது சில பெண்கள் நிறம் மற்றும் ஜரிகையினை மட்டும் கவனிக்கின்றனர். பட்டுப் புடவைகளில் விலை, தரம் போன்றவை மிகவும் முக்கியம். சில புடவைகள் மிகவும் பளபளப்பான இருக்கும். ஆனால் எல்லா சேலைகளும் பட்டுப்புடவைகளாக இருப்பதில்லை. விலை மலிவாக உள்ள புடவைகள் பெரும்பாலும் மலிவான நூலினால் நெய்யப்பட்ட கலப்படப் புடவைகளே. குறைந்த பட்சம் ரூ.3,500 க்கும் அதிகமான விலையில் உள்ள புடவைகளைத் தேர்வு செய்வது நலம். ஏனெனில் பட்டு உற்பத்திக்குத் செலவு அதிகம் என்பதால் விலை குறைந்த புடவைகள் தரமற்றவையாக இருக்க வாய்ப்பு உண்டு.

புடவையின் நீளமும் வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஒன்று. புடவை 5 ½ மீட்டர்+ஜாக்கெட் 70 சென்டி மீட்டர் இருக்கிறதா என்று சோதித்து பார்த்து வாங்க வேண்டும். புடவையின் அகலம் 47 முதல் 50 இன்ச் இருக்க வேண்டும். இதற்குக் குறைவான அளவுள்ள புடவைகள் பண்டிகை காலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதுமுண்டு. எனவே கவனமாகச் செயல்பட வேண்டும்.

புடவையின் ஜரிகை – ஆஃப் ஃபைன், சில்வர், ப்யூர் என்று மூன்று வகைகளில் கிடைக்கின்றன. இவற்றில் சில்வர் அதிக விலையுடையது. சில்வர் ஜரிகையின் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.  தங்க முலாம் பூசப்பட்ட சில்வர் ஜரிகை உள்ள புடவைகள் ரூ. 70,000 த்தை தாண்டுகிறது. எனவே சில்வர் ஜரிகை எனும் போது அதன் விலையைச் சரிப்பார்த்து வாங்க வேண்டும். குறைவான விலையாக இருக்கும்போது அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஃப் பைன் ஜரிகை உள்ள பட்டுப்புடவையின் விலை சாதாரணமாக ரூ. 10000 ஆகும். சில நேரங்களில் புடவை முழுக்க ஜரிகை இருக்கிறது என்றால் அதன் தரம் எவ்வாறு இருக்கும் என்பதனை இந்த விலையுடன் சரிப்பார்த்துக் கொள்ளவும்.

மத்திய அரசின் சில்க் மார்க் முத்திரை (Silk mark). ஹேண்டலூம் மார்க் முத்திரை (Handloom mark) இருக்கும் புடவைகளில் பெரும்பாலும் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த ரகப் புடவைகளின் விலை அதிகமாக இருந்தாலும் அதற்காக வருத்தப்பட தேவையில்லை. பட்டுப் புடவையின் விலை குறைவாக இருக்கிறது என்றால் அது வணிக ரீதியாக விற்கப்படுபவையாகவும் இருக்கலாம். எனவே முத்திரையைச் சரிப்பார்த்து புடவையை வாங்க வேண்டும். உண்மையான பட்டு நூலினை எரிக்கும்போது மெதுவாக எரிந்து தானாகவே அணைந்து விடும். மேலும் முடி கருகுவதைப் போன்ற வாசனை வரும். அதனை வைத்து பட்டின் தரத்தினைத் தெரிந்து கொள்ளலாம். சில நூலினை எரித்து சரிப்பார்த்தும் வாங்கிக் கொள்வது நல்லது.

பட்டுப் புடவைகளைப் பயன்படுத்தும் முறை

நாமாகப் பட்டுப்புடவைகளைத் துவைக்கக் கூடாது. கடைகளில் டிரை வாஷ் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பட்டுப் புடவைகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் மடித்து வைப்பது தவறு. ஒரே மாதிரியான மடிப்புகளுடன் வைத்திருக்கும்போது அந்த மடிப்பு கிழிந்து விடும். எனவே சில மாதங்களுக்குப் பிறகாவது புடவையை எடுத்து  வேறு மாதிரி மடித்து வைக்க வேண்டும். பட்டுப் புடவைகளைப் பெரும்பாலும் இதமான வெயிலில் உலர்த்த வேண்டும். உடுத்தும் போது ஒரு வேளை கறை படிந்து விட்டது என்றால் உடனே சாதாரணத் தண்ணீரைக் கொண்டு துடைத்து விடலாம். கறையை அப்படியே விட்டு விட்டால் படிந்து விடும். அதிக விலை கொடுத்து வாங்கும் புடவைகளுக்கு மிகுந்த பாராமரிப்பு அவசியம்.

பட்டு நூல் வகைகள்

வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் பட்டு நூல்களைப் பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்க முடியும்.

மல்பரி – மல்பரி செடியினை உணவாக உட்கொள்ளும் ‘பம்பேக்ஸ் மோரி’ என்ற பட்டுப்புழு (Bambyx mori)  விலிருந்து மல்பரி பட்டு நூல் உற்பத்திச் செய்யப்படுகிறது. பெரும்பாலும் அறைகளில் வைத்தே இப்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் அதிகளவில் உற்பத்திச் செய்யப்படும் பட்டு நூலாக மல்பரி இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் இருந்து இப்பட்டு நூல் கிடைக்கிறது.

ஓக் டசார் பட்டு - ஓக் செடியை உணவாக உட்கொள்ளும் ‘அன்தேரே புரேயிலி’ என்ற பட்டுப் புழுக்களிலிருந்து ஓக் டசார் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் மெல்லிய இழைகளால் ஆனது. இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டசார் பட்டு – ‘அன்த்தேலே மைலிட்டா’ என்ற பட்டுப்புழுவிலிருந்து கிடைக்கும் டசார் பட்டு மிகவும் முரட்டு நூலாக இருக்கிறது. பெரும்பாலும் இயற்கையில் கிடைக்கும் புழுக்களைக் கொண்டே இந்த வகை பட்டு நூல் உற்பத்திச் செய்யப்படுகிறது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள மலைவாழ் மக்கள் இதன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

எரி பட்டு- ஆமணக்கு இலைகளை உணவாக உட்கொள்ளும் ‘பிலோசாமியா ரசினி’ பட்டுப்புழுக்களிலிருந்து எரி பட்டு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவும் இயற்கையான முறையில் திறந்த நிலையில் உற்பத்தி செய்யப்படும் பட்டாகும். அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து இந்த வகை பட்டு நூல்கள் கிடைக்கின்றன.

முகா பட்டு – சாம் மற்றும் சோல் தாவரங்களை உண்ணும் ‘அன்தேரே அசாமின்ஸ்’ என்ற பட்டுப்புழுக்களிலிருந்து இந்த வகை பட்டு நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பட்டு நூல்களிலிருந்து உயர்ந்த ரக பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டு நூல்கள் அதிகளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் கிடைக்கிறது.

பட்டுப் புடவைகளுக்குப் பெரும்பாலும் மல்பரி பட்டு நூல்களே பயன்படுத்தப் படுகின்றன. ஓக், எரி, முகா போன்ற பட்டு நூல்களின் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால் பட்டுச்சேலைகளின் உற்பத்திக்கு அரிதாகவே பயன்படுத்தப் படுகின்றன. மேலும் மல்பரி பட்டு நூல்கள் மிகவும் வழவழப்பானவை என்பதால்  சேலைகளை நெய்வதற்கு இலகுவான தன்மையினைக் கொண்டிருக்கின்றன.

இந்தியப் பட்டுச் சேலைகள்

நூல்களைப் பொறுத்து மட்டுமல்லாமல் அதன் செய் நேர்த்தியும் பட்டுப் புடவைகளுக்கு அழகு சேர்ப்பவை என்பதால் அதன் உற்பத்தித் திறனைப் பொறுத்தே புடவைகள் வாங்கப்பட வேண்டும். பட்டுப்புடவைகள் அதிக விலைக்கொடுத்து வாங்கப்படுவதால் அதன் தரத்தினை உறுதி செய்வதற்காகத் தற்போது இந்திய அரசாங்கத்தால் சில்க் முத்திரை வழங்கிவருகிறது. 

காஞ்சிபுரம் பட்டு – தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் முதலில் தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சிறப்பான வடிவமைப்பு, கம்பீரமான தோற்றம் கொண்டது. எளிதில் கிழிந்து போகாத வடிவில் தயாரிக்கப்படுபவை காஞ்சிபுரம் பட்டுகள்.

போச்சம்பள்ளி பட்டு – நவீன வடிவங்களைக் கொண்டு தாயாரிக்கப் படுபவை போச்சம்பள்ளி பட்டு. பட்டுப் புடவைகளிலும் நவீனத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் பெரும்பாலும் போச்சம் பள்ளி பட்டு புடவைகளை விரும்புகின்றனர்.

செட்டிநாடு பட்டு – பாரம்பரிய முறைகளில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவை செட்டிநாடு பட்டு. கட்டம் போன்ற வடிவமைப்பு, பெரிதான பார்டர் போன்றவை இதன் சிறப்பம்சமாகும். மிகவும் எடை குறைவாகவும் உடுத்திக் கொள்வதற்கு எளிதாகவும்  இப்பட்டு ரகங்கள் அமைந்திருக்கும்.

பனாரஸ் பட்டு – தங்க இழைகளைச் சேர்த்தும் இந்தப் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுவதுண்டு. வேலைப்பாடுகள் இதில் மிகுந்து காணப்படும் என்பதால் பனாரஸ் பட்டு மிகவும் விரும்பப் படுகிறது. கட்ஒர்க், தஞ்சொய், புடிடார், ஜங்களா மற்றும் வஸ்கட் என்பது பனாரஸ் பட்டுப் புடவைகளின் சில வகைகளாகும். ஜரிகைகள் பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளியால் இழைக்கப்படுகின்றன.

மைசூர் சில்க் – தூய்மையான பட்டு நூலினால் தங்க ஜரிகை கொண்டு நெய்யப்படுகின்றன. உயர் தரமானதாகவும் இப்பட்டு கருதப்படுகிறது.

சந்தேரி பட்டு - வெறும் பட்டு நூல்கள் மட்டுமல்லாமல் காட்டன் நூல்களையும் இணைத்து இந்தப் பட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டுப்புடவைகள் சில நேரங்களில் மிகவும் எடையுடன் இருப்பதனை விரும்பாத பலர் இந்த வகைப் பட்டினைத் தேர்வு செய்கின்றனர்.

உப்படா சாரீஸ் – ஆந்திர மாநிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் உப்படா பட்டு ரகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மெல்லியப் பட்டினாலும் பருத்தி இழைகளைக் கொண்டும் இப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பு, பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அமைந்திருக்கும்.

அதேபோன்று பைதாலி சாரீஸ், அஸ்ஸாம் சில்க், துகார் சில்க் போன்றவையும் பட்டு வகைகளில் மிகவும் உயர்ந்த ரகமாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பட்டு புடவைகள் அந்தந்த பாரம்பரிய முறைப்படி நெய்யப்படுவதால் வடிவமைப்பு மற்றும் டிசைன்களில் மிக நேர்த்தியும் மண்சார்ந்த நெருக்கமும் இணைந்தே காணப்படுகின்றன எனலாம்.

பட்டினை விலைக்கொண்ட ஒரு பொருளாகக் கருதுவதை விட பாரம்பரியத்தின் அடையாளமாகவும் கம்பீரமாகவும் கருதும் போக்கு பெருகிக் கொண்டே வருகிறது. எனவே உழவு பண்டிகையான பொங்கலுடன் தரமான பட்டின் பாரம்பரியத்தையும் பெண்கள் இணைக்கும் போது அதிக மகிழ்வினைப் பெறலாம். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.