Download App

Sindhubaadh Review

'சிந்துபாத்' :  ஆடியன்ஸ்களை துவம்சம் செய்யும் சிந்துபாத்

இயக்குனர் அருண்குமாருடன் 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பின் விஜய்சேதுபதி மூன்றாம் முறையாக 'சிந்துபாத்' படத்தில் இணைவதால் இந்த கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தடைகள் பல தாண்டி வந்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

தாய்லாந்து ரப்பர் தோட்டத்தில் தாய்மாமன் பட்ட கடனுக்காக வேலை செய்யும் அஞ்சலி, விடுமுறைக்காக சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். அங்கு சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் விஜய்சேதுபதியுடன் காதல் ஏற்படுகிறது. மீண்டும் விடுமுறை முடிந்து தாய்லாந்து செல்லும்போது விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பும் விஜய்சேதுபதி திடீரென விமான நிலையத்திலேயே தாலி கட்டுகிறார். அதன்பின் தாய்லாந்தில் அஞ்சலி ஆபத்தில் இருக்கின்றார் என்பதை கேள்விப்பட்டவுடன் தாய்லாந்து செல்லும் விஜய்சேதுபதி, அஞ்சலியை மீட்டு கொண்டு வந்தாரா? அஞ்சலியை பிடித்து வைத்திருப்பவர்கள் யார்? அவர்களுடைய பின்புலம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

திறமையான திருடனாக அறிமுகமாகும் விஜய்சேதுபதி முதல் அரை மணி நேரம் மகன் சூர்யாவுடன் லூட்டி அடித்து, அதன்பின் அஞ்சலியிடம் ரொமான்ஸ் செய்வதிலேயே முதல் பாதியை கழித்துவிடுகிறார். அதன்பின் இரண்டாம் பாதி முழுவதும் ஆக்சன், சேஸிங் என போவதால் விஜய்சேதுபதியின் நடிப்புக்க்கு தீனி போடும் காட்சி சுத்தமாக இல்லாதது அவருடைய குறை இல்லை. ஆக்சன் காட்சியிலும் எந்தவித விறுவிறுப்பும் இல்லை என்பதால் விஜய்சேதுபதி இந்த படத்தின் மூலம் நம்மை ரொம்பவே ஏமாற்றிவிட்டார். 'காது கேட்காது ஆனால் கேட்க வேண்டிய விஷயம் மட்டும் கேட்கும்' என்ற வசனம் மட்டும் ஓகே

அஞ்சலி வழக்கம்போல் கத்தி கத்தி பேசுகிறார். விஜய்சேதுபதி இந்த படத்தில் சரியாக காது கேட்காதவராக நடித்துள்ளதால் கொஞ்சம் அதிகமாகவே கத்துகிறார். திறமையான நடிகையாகிய அஞ்சலியை கதையின் தேவைக்கேற்ப கூட இயக்குனர் பயன்படுத்தவில்லை

படத்தின் ஒரே ஆறுதல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா. துறுதுறுவென பார்த்தவுடன் மின்னல் வேகத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனாக நடித்துள்ளார். இவரை தாய்லாந்துக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவையே கதையில் இல்லை. ஹீரோவின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அழைத்து சென்றதுபோல் தெரிகிறது. வில்லன் தேர்வும், அவரிடம் வாங்கிய நடிப்பும் மகா மட்டம். இப்படி ஒரு ஏமாளி வில்லனை எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது. தாய்லாந்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு கொடூரமான வில்லனாக அறிமுகம் செய்து ஒரே ஒரு நபரை அதுவும் எந்தவித ஆயுதங்களும் இல்லாத ஒருவரை பிடிக்க முடியாமல் போனது வில்லனின் வீக்கா? அல்லது இயக்குனரின் வீக்கா? என தெரியவில்லை

இந்த படத்தில் உருப்படியாக வேலை செய்த ஒரே நபர் யுவன்ஷங்கர் ராஜா. இரண்டு பாடல்கள் அருமை. பின்னணி இசையும் சூப்பர். இந்த படத்தை யாராவது பார்க்க விரும்பினால் யுவனுக்காக மட்டும் பார்க்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் கேமிராவில் தாய்லாந்தின் வறட்சியான பகுதிகள் அதிகம் உள்ளது. எடிட்டர் ரூபன் முடிந்தவரை விறுவிறுப்பாக படத்தை கொண்டு போக முயற்சித்துள்ளார்.

இயக்குனர் அருண்குமாரின் திரைக்கதை ரொம்ப பழையது மட்டுமின்றி படுவீக்காக உள்ளது. அவர் சொல்ல முயற்சித்த ஒரே ஒரு புதுவிஷயம் ஸ்கின் பிசினஸ்' அதையும் ஒரு இரண்டு நிமிட டாக்குமெண்டரி போல் சொல்லி முடித்துவிட்டார். சுத்தமாக லாஜிக் இல்லாத காட்சிகள், பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் எரிச்சலடைய செய்கின்றன. ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும் காட்சியை ரொம்ப பில்டப் செய்துள்ளார்கள். முப்பது வருடத்திற்கு முன்னரே இதுபோன்ற காட்சியை ஜாக்கிசான் படத்தில் பார்த்துவிட்டோம். அதேபோல் விலைமாதுவிடம் அஞ்சலியை தேடி போகும் விஜய்சேதுபதியிடம் அந்த பெண் கூறும் வசனம் முப்பது வருடங்களுக்கு முன்னரே கமல்ஹாசனின் மகாநதி' படத்தில் வந்துவிட்டது. தாய்லாந்துக்கு முன்பின் சென்றிராத விஜய்சேதுபதி வில்லனின் வீட்டிற்கே சென்று திருடுவதும், வில்லனின் அண்ணனையே கொலை செய்வதும், அவருடைய வீட்டையே பாம் வைத்து வெடிக்க செய்வதும் கொஞ்சம் கூட நம்பும் வகையில் இல்லை. 

மேலும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா என மாறி மாறி சம்பவங்கள் நடக்கும் இடத்தை காண்பிப்பதால் இப்போது எந்த நாட்டில் இருக்கின்றோம் என்று குழம்ப வேண்டியிருக்கிறது. அவ்வளவு எளிதில் எந்தவித டாக்குமெண்டும் இல்லாமல் நாடு விட்டு நாடு போகலாமா? வில்லன் லிங்கிற்கு படத்தின் ஆரம்பத்தில் பயங்கர பில்பட கொடுத்த இயக்குனர் அதன்பின் அவரது கேரக்டரை படுசொதப்பலாக காண்பிக்க தொடங்கியதில் இருந்தே அவர் சறுக்கிவிட்டது தெரிகிறது. வசமாக வந்து சிக்கும் விஜய்சேதுபதியை நூற்றுக்கணக்கான அடியாட்கள் இருந்தும் எத்தனை முறைதான் கோட்டை விடுவார்? என்றே தெரியவில்லை. 

இந்த படத்தை எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படம் என ரிலீசுக்கு முன்னர் கூறியிருந்தனர். எதிரிகளை மட்டுமின்றி படம் பார்க்க வருபவர்களையும் துவம்சம் செய்துவிட்டனர் என்றே கூற வேண்டும். விஜய்சேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும்போது பிரச்சனைகள் ஏற்படுவதால் இனிமேல் தயாரிப்பாளரை தேர்வு செய்வதில் கவனத்துடன் இருக்க போவதாக அவர் கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது. தயாரிப்பாளரை மட்டுமின்றி கதையையும் அவர் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த படம் அவருக்கு உணர்த்தியிருக்கும்

மொத்தத்தில் எந்தவித புதுமை, சுவாரஸ்யம், விறுவிறுப்பு எதுவும் இன்றி ஏனோதானோ என எடுத்த ஒரு ஆக்சன் படம் தான் சிந்துபாத்
 

Rating : 2.0 / 5.0