இனி விலங்கை கொல்லாமல்… ரத்தம் சிந்தாமல்… இறைச்சி சாப்பிடலாம்… இறைச்சியில் புது புரட்சி…
இறைச்சி சாப்பிட வேண்டும் என்றால் அதற்காக எதாவது ஒரு விலங்கை கொன்றுதான் ஆகவேண்டும். அப்படி விலங்கை கொல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நுகர்வோர் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு மனித உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய சிக்கல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் அரசு உலகில் முதல் முறையாக மாற்று இறைச்சிக்கு (Lab Grown meat) அனுமதி வழங்கி இருக்கிறது.
சான் பிரான்ஸ்கோ நகரில் உள்ள ஸ்டஸ்ட் அப் நிறுவனமான ஈட் ஜஸ்ட் இன்கார்பரேஷன் எனும் நிறுவனம்தான் இத்தகைய மாற்று இறைச்சியை உருவாக்கி இருக்கிறது. இதற்காக விலங்குகளின் தசை செல்களை வைத்து ஆய்வகத்தில் விலங்குகளின் இறைச்சியை புதிதாக உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கப்படும் இறைச்சியால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மனித உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இந்த இறைச்சி உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்படும் உணவுகளால் உடலுக்கு கேடு வருமா என்ற அடுத்த கேள்வி வரலாம். ஆனால் இத்தகைய உணவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றே அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சிங்கப்பூரில் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள Lab Grown chicken meat இன் விலை 50 டாலர் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காரணம் இதை ஆய்வகத்தில் வைத்து உருவாக்குவதற்கு அதிக செலவு ஆகிறது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பால் எதிர்காலத்தில் உணவு முறையில் புதிய புரட்சி ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் விலங்குகளை கொலை செய்யாமல், ரத்தம் சிந்தாமல் எளிய முறையில் இறைச்சியை உண்டு வாழும் நிலைமை எதிர்க்காலத்தில் தோன்றலாம் எனக் கூறும் சிங்கப்பூர் அரசு புதிய இறைச்சியை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறுகிறது. இதேபோல இந்தியாவின் ஐஐடி குவஹாத்தியிலும் ஆய்வகத்தில் வைத்து மாற்று இறைச்சி தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.