நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாடகர் கானா பாலாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் இவ்வளவா?

பாடகர் கானா பாலா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை பார்த்து அந்த தொகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலக பாடகர்களில் ஒருவரான கானா பாலா சென்னையில் உள்ள திருவிக நகர் 65வது மண்டலம் 72 வது வார்டில் போட்டியிட்டார். ஏற்கனவே இவர் கடந்த 2006, 2011ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியில் போட்டியிட்டதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை திருவிக நகர் 72 வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 6095 வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட முன்னிலையில் இருந்த கானா பாலா இறுதியில் இரண்டாமிடம் பெற்று தோல்வி அடைந்தார் என்றாலும், அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை அந்த தொகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.