close
Choose your channels

குடுமிபிடி சண்டையில் தென் சீனக்கடல் பகுதி!!! சர்ச்சைக்கு காரணம்தான் என்ன???

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடுமிபிடி சண்டையில் தென் சீனக்கடல் பகுதி!!! சர்ச்சைக்கு காரணம்தான் என்ன???

 

சீனா, தென் சீனக்கடல் பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. தென் சீனக் கடல் பகுதியில் பல செயற்கையான திட்டுகளை உருவாக்கி அப்பகுதியில் சீனா  இராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்  நிர்வாகப் பணிகளையும் அந்தப் பகுதியில் தொடங்கியருப்பதாகச் தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் இச்செயலுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தற்போது அமெரிக்காவின்  இராணுவப் படை அப்பகுதியில் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தற்போது அப்பகுதியில் தனது இராணுவத்தை குவித்து வருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் தென் சீனக் கடல் பகுதியில் மொய்ப்பதற்குக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சீனாவின் அண்டை நாடுகளான தைவான், பிலிப்பைன்ஸ், ப்ரூனே, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் சீனாவின் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்ப்பதற்கு வலுவில்லாத நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாடு சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் சீனா இந்த தீர்ப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யமே. இவ்வளவு ஆதிக்கத்திற்கும் சீனாவின் வளர்ச்சியே காரணமாக சொல்லப்பட்டாலும் தென் சீனக் கடல் பகுதியில் அதிகளவில் இயற்கை வளங்கள் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

சீனா பொருளாதார வளர்ச்சியில் தற்போது உச்சத்தில் இருக்கும் ஒரு நாடாக மாறியிருக்கிறது. அதுவும் இராணுவ வளத்தில் உலகத்திலேயே ஒரு முன்னேறிய நாடாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் அமெரிக்கா தற்போது 5000 கி.மீட்டரைத் தாண்டி தாக்கும் ஏவுகணை ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறது. இராணுவ தளவாடங்களை வெகுவாக உயர்த்தினால் சீனாவை பயமுறுத்தலாம் என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாது தென் சீனக் கடல் பகுதியில் உள்ள பிரச்சனைக்கு தற்போது சீனாவின் அண்டை நாடுகளைத் திரட்டும் பணியிலும் அமெரிக்கா ஈடுபட ஆரம்பித்து இருக்கிறது. அதைத்தவிர ஜப்பானும் மற்றொரு வலுவான நாடாக தென் சீனக் கடல் பிரச்சனைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாட்டிற்கு அதன் கடல் பகுதியில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை ஐ.நாவின் ஒப்பந்த உரிமையைக் கொண்டே நிர்ணயிக்க முடியும். ஐ.நாவின் பொருளாதார கடல் எல்லை ஒப்பந்தம் இதற்கு ஒரு முக்கிய வழிகாட்டியாக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன. அதன்படி 370 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே கடல் பகுதியில் சொந்தம் கொண்டாட முடியும். அந்த எல்லைக்குள் கட்டமைப்பு, நிர்வாகம், வணிகம் போன்ற செயல்பாடுகளை செய்து கொள்ளலாம். ஆனால் அந்த எல்லைகளைத் தாண்டி எந்தவொரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஒட்டு மொத்த பகுதியையும் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து இருப்பதுதான் பெரிய சிக்கலே. உலகின் மூன்றில் ஒரு பங்கு சரக்கு வர்த்தகம் இந்தக்கடல் பகுதி வழியாகத்தான் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா தென் சீனக் கடல் பகுதியில் உள்ள மலைக்கா ஜலசந்தி வழியாக ஆண்டுதோறும் 55 மில்லியன் டன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தென் சீனக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து இருக்கிறது. அதற்கான அறிவிப்பை வெளியானதும் பிலிப்பைன்ஸ் பிரதமர் டோட்ரிகோ மகிழ்ச்சி தெரிவித்தார். எனவே சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ளும் என்ற முடிவும் தெளிவாக அறிவிக்கப் பட்டு இருக்கிறது.

சீனாவின் இத்தகைய செயலுக்கு மற்றொரு முக்கியக் காரணம் இருக்கிறது. அப்பகுதியில் 11 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் வளம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் 190 சதுர அடிக்கு எரிவாயு கொட்டிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 30 லட்சம் சதுர கிலோமீட்டர் பகுதி சர்ச்சைக் குரியதாகக் கருதப்படுகிறது. அந்தப் பகுதியில் தற்போது செயற்கைத் திட்டுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அப்பகுதியில் கட்டமைப்புகளையும் சீனா மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.  

கொரோனா விஷயத்தில் சீனா ஏற்கனவே தவறிழைத்து விட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து விடலாம் என அமெரிக்கா நினைக்கிறது. இந்தியா எல்லைப் பகுதியில் இருக்கும் சிக்கலால் சீனாவிற்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது வர்த்தக விஷயத்திலும் தென் சீனக் கடல் பகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு தென் சீனக் கடல் பகுதி பெரும் தலைவலி என்றாலும் கொரோனா நேரத்திலும் அனைத்து நாடுகளும் ஒருமித்த குரலை எழுப்பியிருப்பதில் அரசியல் இல்லாமலும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.