close
Choose your channels

Spyder Review

Review by IndiaGlitz [ Wednesday, September 27, 2017 • தமிழ் ]
Spyder Review
Banner:
NVR Cinema
Cast:
Mahesh Babu, Rakul Preet Singh, RJ Balaji, Deepa Ramanujam, Priyadarshi Pullikonda, Shaji Chen
Direction:
AR Murugadoss
Production:
N. V. Prasad, Tagore Madhu and Manjula Swaroop
Music:
Harris Jayaraj

தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு நம்ம ஊர் கமர்ஷியல் கிங் ஏ ஆர் முருகதாஸுடன் கைகோர்த்து வந்திருக்கும் ஆக்க்ஷன் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படம் இருவரின் ரசிகர்களையும் குஷி படுத்தியதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
மகேஷ் பாபு ஒரு இன்டெலிஜென்ஸ் பீரோ எனப்படும் புலனாய்வு துறை அதிகாரி. அவர் வேலை லட்சக்கணக்கான மக்களின் செல் போன்களை  அரசாங்கத்திற்காக ஒட்டு கேட்பது. சமுதாயம் மீது அக்கறை கொண்ட ஹீரோ ஒரு மென்பொருளை கண்டு பிடித்து தான் வேவு பார்க்கும் பொது மக்களில் யாருக்காவது ஆபத்து என்று தெரியவந்தால் உடனே சென்று காப்பாற்றுவது அவர் வாடிக்கை. அப்படி ஒரு முறை ஒரு பெண்ணை காப்பாற்ற தன் தோழியான போலீஸ் காவலரை அனுப்ப அவர்கள் இருவரும் மர்மமான முறையில் கொடூரமாக கொலையாகிறார்கள். மனமுடையும் ஹீரோ கொலையாளியை கண்டு பிடிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி நெருங்கும்போது மனநோயாளி கொலைகாரர்களான எஸ் ஜே சூர்யாவையும் அவர் தம்பி பரத்தையும் அடையாளம் கண்டு கொள்ள அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதே ஸ்பைடரின் மீதி ஆக்ஷன் திரைக்கதை.

மாஸ் ஹீரோ மகேஷ் பாபுவுக்கு இந்த படம் யானைக்கு கிடைத்த சோளப்பொரி போன்றதுதான் ஆனாலும் அவருடைய வசீகரிக்கும் தோற்றத்தாலும் சண்டை மற்றும் நடன திறமையாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசித்திருப்பதற்க்காகவும் அழகாக சொந்த குரலில் தமிழ் பேசியதர்க்காக தனியாக ஒரு சபாஷ் சொல்லலாம். ராகுல் ப்ரீத் சிங்க் வழக்கமான முருகதாஸ் படங்களில் வரும்  ஊறுகாய் போன்ற கதாநாயகி. அவர் பாத்திரத்தை வித்தியாசமாக சொல்கிறேன் என்ற பெயரில் அவரை  பலான விடீயோக்களை பார்த்துவிட்டு காமத்துக்காக ஏங்கி ஹீரோ பின்னால் போவது போல வடிவமைத்தது எத்தனை சதவீதம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. மிக பெரிய ஆரவாரத்துடன் அறிமுகமாகும் சைக்கோ வில்லன் எஸ் ஜெ சூர்யாவுக்கு தன் முழு திறமையை காட்டும் அளவுக்கு பாத்திரப்படைப்பிலோ திரைக்கதையிலோ இடமில்லை. பேட்மேன் படத்தில் ஜோக்கராக  நடித்த மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜெரை காப்பியடித்தது போன்று தோன்றுகிறது. படத்தில் சூர்யாவுக்கு சொன்ன சுடுகாட்டு பிளாஷ் பேக்கில் வரும் சிறுவனின் நடிப்பும் காட்சியமைப்பும் குலை நடுங்க வைக்கிறது. சின்ன வில்லனாக பரத் பாவம் அவர் பாத்திரத்துக்கு எந்த வலுவும் இல்லை. ஆர் ஜெ பாலாஜியை இவ்வளவு சீரியசாக காற்று வெளியிடையில் தான் முன்னர் பார்த்திருக்கிறோம். அவர் செய்ய வேண்டியதுக்கும் சேர்த்து படத்தில் இருக்கும் லாஜிக்  ஒட்டைகளும் ஹீரோ சொன்ன படி நடக்கும் உயர் போலீஸ்க்காரர்களும் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கின்றன.

மகேஷ் பாபுவுக்கு அடுத்து படத்தில் அதிகம் கவரும் சீன் வில்லனிடமிருந்து தன் தாயையும் தம்பியையும் காப்பாற்ற பயன்படுத்தும் அந்த புத்திசாலித்தனமான ஐடியா. அதே போல வில்லனின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க இல்லத்தரசிகளை பயன்படுத்திய விதம் காதில் பூ என்றாலும் ரசிக்கும்படி இருக்கின்றது. முன்னர் சொன்னபடி அந்த சுடுகாட்டு பிளாஷ் பேக் படத்தின் மிக அழுத்தமான பகுதிகளில் ஒன்று.

மாஸ் ஹீரோ படத்திற்கு லாஜிக் பார்க்க கூடாதுதான் ஆனால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஆயிற்றே அதனால்தான் ஒவ்வொன்றும் உறுத்துகிறது. பிளாஷ் பேக்கில் சொன்ன அழுத்தம் எஸ் ஜே சூர்யாவை காட்டும்போது காட்சிகளில் இல்லாதது பெரிய மைனஸ். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஹீரோ பல ஆயிரம் உயிர்களை பலியாக்கும் கொடூர மனங்கொண்ட வில்லனை சுட்டு கொல்ல வாய்ப்பு கிடைத்தும் அவனை வேண்டுமென்றே காயத்துடன் தப்ப விட்டு இன்னும் பல நூறு பேரை சாக விடுவது அபத்தத்திலும் அபத்தம்.

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கனவே கேட்டமாதிரி இருந்தாலும் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையில் இவர் பங்கு சிறப்பு. அதே போல் ஜாம்பவான்கள் சந்தோஷ் சிவனும் ஸ்ரீகர் பிரசாத்தும் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகள் ஏற்று ஸ்பைடருக்கு மெருகு எற்றியிருக்கிறார்கள். முருகதாஸ்க்கு  தெகிடி போல ஒரு சைகோலொஜிக்கல் திரில்லர் என்ற வகை படமாக ஒரு சின்ன ஹீரோவை வைத்து விறு விறுப்பாக சொல்ல வேண்டிய கதையில் ஒரு பெரிய ஹீரோவை நுழைத்து அந்த ஜானருக்கும் பொருந்தாமல் ஹீரோ இமேஜிக்கும் பொருந்தாத ரெண்டும்கெட்டான் படமாகியிருப்பது வருத்தமே

மகேஷ் பாபு மற்றும் ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்களுக்கு பீடிக்கலாம்

Rating: 2.5 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE