யோகிபாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்: உதவி செய்த யார்க்கர் மன்னன் நடராஜன்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானதை அடுத்து இந்த படத்தை பார்த்த ஐபிஎல் வீரர் ஒருவர் யோகிபாபுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வீடியோகால் மூலம் அவர் பாராட்டு தெரிவிக்க நம்மூர் நடராஜன் உதவி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடிடி தளத்தில் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ திரைப்படம் வெளியானது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வெளிவந்த படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஸ்ரீவத்ஸ கோஸ்வாமி என்பவர் பாராட்டி உள்ளார். அவர் தனது சக வீரர் நடராஜனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனே நடராஜன் ’யோகி பாபு எனது நண்பர்தான் உங்களுடன் அவரை பேச வைக்கிறேன்’ என கூறி தனது மொபைல் போனில் யோகி பாபுவுக்கு வீடியோ கால் செய்து, யோகி பாபு லைனில் வந்தவுடன் ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமியை யோகி பாபு பேசுவதற்கு உதவினார். யோகிபாபுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமி, அவருடன் பேச வைத்த நடராஜனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமி கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் 'மண்டேலா' திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்’ என்று கூறியுள்ளார்.