இப்போதாவது 'அப்பா' என அழைக்கட்டுமா? ஸ்டாலின் கண்ணீர் கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு அனைவருக்கும் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது. கருணாநிதி அவருக்கு தந்தையாக மட்டுமின்றி குருவாக, அரசியல் ஆசானாக இருந்தவர். கருணாநிதியை பொது மேடையில் 'அப்பா' என்று அழைக்காமல் திமுக தொண்டனை போல் 'தலைவர்' என்று அழைத்தவர். இந்த நிலையில் தனது தந்தை மற்றும் தலைவரின் மறைவு குறித்து ஸ்டாலின் உருக்கமான கடிதம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ‘நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95-வது பிறந்தநாளாம் ஜூன் 3-ம் நாள் நான் பேசும்போது, ‘உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும், பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்; தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் வென்று காட்டுவோம்!

கோடானு கோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்... ஒரே ஒருமுறை... “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே” என நான் உச்சரித்துதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒருமுறை இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்

மு.க.ஸ்டாலின்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

எம்ஜிஆர் இருந்திருந்து கலைஞர் இறந்திருந்தால்? கமல்ஹாசன் 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மறைந்த சோகம் திமுக தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு மெரினாவில் இடமில்லை

கருணாநிதி மறைவு: குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சற்று முன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் இறுதியஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கருணாநிதியின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவருக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடங்கள் மற்றும் நேரம் குறித்த தகவல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு காலமானதை அடுத்து தமிழக மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் பிரமுகர்களும்,