திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்!

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்யுமாறு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரவாலி என்ற மாணவி, கல்லூரி ஒன்றில் பி.எஸ்.எஸி இறுதியாண்டு படித்து வந்தார். அவரிடம் அதே கல்லூரியில் படிக்கும் ஒருவர் கடந்த சில மாதங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரவாலி தொடர்ந்து மறுத்து வரவே, இன்று காலை 9 மணிக்கு ரவேலி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்தும் ஒருவர் கூட அந்த மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மாணவி ரவேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், ரவேலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை கைது செய்து அவர் மீது இபிகோ 307 மற்றும் 354D ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.