ஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் உள்ள ஆவி பிடிக்கும் முறை அதாவது “ஸ்டீம் தெரபி” மூலம் கொரோனா வைரஸை விரட்ட முடியும் என்ற தகவலை மும்பையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று தெரிவித்து இருக்கிறது. மும்பையின் செவன் ஹில்ஸ் மருத்துமனையைச் சார்ந்த மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு உகந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பாரம்பரிய ஆவி பிடிக்கும் முறை (ஸ்டீம் தெரபி) குறித்தும் பரிசோதித்து பார்த்திருக்கின்றனர். இந்த முறையைப் பின்பற்றும்போது கொரோனா வைரஸை மிக எளிதாக கடந்து விடமுடிகிறது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பொதுவாக கொரோனா வைரஸ் மூக்கு, வாய், கண் போன்ற 3 வழிகளில்தான் மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து விடுகிறது. நமக்கு சளி பிடிக்கும்போது நாசித் துவாரங்களில் இருக்கும் சளியை விரட்ட நம்முடைய பாரம்பரிய வழிமுறையான ஆவி பிடிக்கும் முறையை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதே டெக்னிக்கை கொரோனா வைரஸ்க்கும் பயன்படுத்திப் பார்த்தால் என்ன என்று விஞ்ஞானிகள் குழு டாக்டர் தீலிப் பவார் தலைமையில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டது.

கொரோனா வைரஸை பொறுத்த வரையில் 56-60 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இறந்து விடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். தற்போது கொரோனா நோயாளிகளிடம் ஆவி பிடிக்கும் முறையில் குறைந்தது 70-80 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மூக்கு, வாய் போன்ற துவாரங்களில் புகுகிறது. இதனால் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைய முற்பட்டாலும் அதனால் பல்லாயிரக் கணக்காக ஜெராக்ஸ் எடுக்க முடியாது. கொரோனா வைரஸின் திறனைக் குறைப்பதற்கு இது மிகவும் எளிதான வழிமுறையாக இருக்கிறது என்றும் அந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்து இருக்கிறது.

இந்தப் பரிசோதனை முறைக்காக லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் கொண்ட 105 கொரோனா நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. முதல் குழுவில் லேசான பாதிப்புள்ள சுகாதாரப் பணியாளர்கள், இரண்டாவது குழுவில் அறிகுறி கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர கொரோனா நோயாளிகளும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு இருமுறை 5 நிமிடங்கள் வரைக்கும் ஆவி பிடிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டு இருக்கிறது. இதனால் முதல் குழுவில் உள்ளவர்களுக்கு 14 நாட்கள் கழித்து எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் அவர்கள் எளிதாக குணமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவது குழுவில் உள்ள லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 3 நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதாகவும் மிதமான அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் 7-10 நாட்களில் இயல்வு வாழ்க்கைக்கு திரும்பியதாகவும் டாக்டர் தீலிப் பவார் தெரிவித்து உள்ளார். இதனால் கொரோனா சிகிச்சைக்கு இந்த வழிமுறையைப் பின்பற்றலாம் என்றும் அறிகுறி குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்த வழிமுறையாக அமையும் என்றும் அந்த விஞ்ஞானிகளின் குழு குறிப்பிட்டு இருக்கிறது. நாசி, வாய் போன்ற துவாரங்களில் இருக்கும் சளி போன்ற அழற்சி குறைபாடுகள் நீங்கி இதனால் பாதிப்புகளும் குறைந்து போவதாக அந்தக் குழு தெரிவித்து இருக்கிறது.