Download App

Super Deluxe Review

சூப்பர் டீலக்ஸ்  திரைவிமர்சனம் - வாழ்வின் ரகசியம்

உலக சினிமாவில் தரமான படங்கள் வெளியாகும்போது தமிழில் இப்படி ஒரு சினிமா உருவாக்க ஆளில்லையே என்று பல வருடங்களாக ஏங்கிய ரசிகர்களை தனது 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் திருப்தி செய்த இயக்குனர் தியாகராஜா குமாரராஜன் அவர்களின் அடுத்த படைப்புதான் இந்த 'சூப்பர் டீலக்ஸ்'.

இந்த படத்தின் கதையை ஒரு வரி கூறினால் கூட படம் பார்ப்பவர்களின் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் கூற முடியாத நிலை உள்ளது. இருப்பினும் இந்த படத்தில் நான்கு கதைகள். அந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் சேரும் இடம்தான் படத்தின் முடிவு. மனப் பொருத்தமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள், மேட்டர் படம் பார்க்கும் நான்கு சிறுவர்கள், ஏழு வருடங்களுக்கு முன் பிரிந்து போன கணவன் மீண்டும் வீடு திரும்புதல், அம்மாவை காணக்கூடாத கோலத்தில் பார்த்த மகன் ஆகியவைகள் அந்த நான்கு கதைகள். 

இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் குறித்து பார்க்கும் முன் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா குறித்து பார்த்து விடுவோம். இப்படி ஒரு நேர்த்தியான, தெளிவான, ஆழ்ந்து யோசிக்க வைக்கும் வசனங்களுடன், சின்ன சின்ன நடிகர்களிடம் கூட அபார வேலை வாங்கும் திறன் ஒரு இயக்குனருக்கு இருக்க முடியுமா? என்று ஆச்சரியமாக உள்ளது. ஒருசில காட்சிகளுக்கு மிகப்பொருத்தமாக ஒலிக்கும் பின்னணி பழைய பாடல் அசர வைக்கின்றது. குறிப்பாக விஜய்சேதுபதி சேலை கட்டும்போது பின்னணியில் ஒலிக்கும் 'மாசி மாத ஆளான பொண்ணு' என்பதை கூறலாம். இந்த உலகம் தனக்கென ஒரு விதியை நிர்ணயம் செய்துள்ளது. அந்த விதியில் இருந்து வித்தியாசமாக இருந்தால் உலகம் அவனை கேலியாக பார்க்கும் என்ற கான்செப்ட் மிக அருமை. 

மினிமம் பேலன்ஸ் இல்லைன்னா பேங்க்க்காரன் நம்மகிட்ட 250 ரூபாய் ஃபைன் போட்ரான், ஆனால் ஏடிஎம்ல்ல பணம் இல்லைன்னா அவன் நமக்கு 250 ரூபாய் தர்றானா? சிக்னல்ல மீறி போன போலீஸ்காரன் ஃபைன் போட்றான், ஆனால் சிக்னல் வேலை செய்யலைன்ன அவனுக்கு யார் ஃபைன் போட்றது, ஆகிய இயல்பான கருத்துக்களை இதுவரை நம் வாழ்வில் எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பாமா? என்பது சந்தேகம்தான். அதேபோல் மொழி மீது பற்று இருந்தாலும், மதம் மீது பற்று இருந்தாலும் நம்மை பாராட்டுறாங்க, ஆனால் ஜாதி மீது பற்று இருந்தா மட்டும் ஜாதி வெறின்னு சொல்றாங்க, அதுமாதிரி தான இதுவும், இதுக்கு மட்டும் ஏன் வெறின்னு சொல்றாங்க? என்ற கேள்வி கன்னத்தில் அறைவது போல் உள்ளது. 

அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பேசும் ஒரு வசனம், '1000 பேர் மேட்டர் படம் பாக்குறாங்க அவங்க இந்த உலகம் தப்பா சொல்லாது, ஆனால் அதில் நடிக்கும் நான்கு பேரை தப்பா பேசுது. 1000 பேர் பார்க்குற படத்தில நாலு பேர் நடிச்சுதான ஆகணும்? என்ற கேள்வியும், இந்த உலகத்துல 1000 வருசங்களுக்கு முன் யாரும் ட்ரெஸ் போடலை, 100 வருசத்துக்கு அப்புறம் டிரெஸ் போடுவாங்களான்னு தெரியாது. மாறிகிட்டே வர்ற இந்த உலகத்துல எது சரி, எது தவறுன்னு அந்தந்த காலம் தான் தீர்மானிக்குது. இன்னிக்கு சரின்னு சொல்ற உலகம் நாளைக்கு அதேயே தப்புன்னு சொல்லுது' ஆகிய வசனங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் படம் முடியும்போது மனுஷபுத்திரம் பேசும் விஷயங்கள் காமெடியாகவும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கவும் செய்கிறது. 

இரண்டாவது பாதி கொஞ்சம் நீளம் என்பதை தவிர இந்த படத்தில் ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த உலகில் யாரோ ஒருவர் செய்யும் தற்செயலாக செய்யும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பதை குறிக்கும் அந்த டிவியை தூக்கி போடும் காட்சியை பார்க்கும்போது மிரண்டு போவீர்கள். எங்க ஊரிலும் உலக தரத்தில் ஒரு சோஷியல் சினிமா எடுக்க ஆள் இருக்கின்றது என்று அனைவரும் காலரை தூக்கி கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை ரசிக்க நமக்கும் கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். வாழ்வின் அனுபவம், வாசித்தல் பழக்கம், ஆகியவை இருக்கும் நபர்களுக்கு இந்த படம் ஒரு குறிஞ்சிப்பூ. இந்த படத்தை ஒருசிலர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தால் அது அவர்களின் புரிதலின்மையை காட்டுகிறது என்பதுதான் அர்த்தம். மொத்தத்தில் தியாகராஜா குமாரராஜாவுக்கு நமது பாராட்டுக்கள்.

விஜய்சேதுபதிதான் இந்த படத்தின் ஹீரோ என்ற நினைப்பில் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம். இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுடைய காட்சி வரும்போது ஹீரோதான். ஆனாலும் விஜய்சேதுபதிக்கு உடம்பு முழுவதும் நடிப்பு வருகிறது., ஒரு திருநங்கையை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார். மகனிடம் காட்டும் பாசம், போலீஸ் ஸ்டேஷனில் கெஞ்சுவது, போன்ற நடிப்பையெல்லாம் இன்னொரு நடிகரால் கொடுக்க முடியுமா? என்பது சந்தேகமே.

இந்திய திரையுலகில் மிக இயல்பாக நடிக்க கூடிய பகத் பாசிலை இயக்குனர் செமையாக வேலை வாங்கியுள்ளார். என்கிட்ட இல்லாதது அப்படி என்னடா உன்கிட்ட இருக்கு என்று சொல்லிவிட்டு அந்த நபரை ஒரு பார்வை பார்ப்பரே? அப்பா...அபாரம்? சமந்தாவிடம் சரக்கு அடித்தது போல் நடித்து பேசும் வசனங்கள், பகவதி பெருமாளிடம் கெஞ்சும் காட்சிகள், உன்னை போட்டவன் எல்லாம் செத்து போயிட்றான், இனிமேல் உன் பக்கத்துல கூட வரமாட்டேன் என்று கூறும் காட்சி, கொஞ்சம் கூட மலையாள வாடையே இல்லாமல் பேசும் வசனம் என பகத் பாசிலின் நடிப்பை இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

சமந்தாவுக்கு முன் இந்த கேரக்டரில் நடிக்க இரண்டு முன்னணி நடிகைகள் மறுத்தார்களாம். அவர்கள் ஏன் மறுத்தார்கள் என்பது படம் பார்க்கும்போது புரியும். இப்படி ஒரு சர்சையான கேரக்டர், செய்த தப்பை மறைக்காமல் கூறும் நேர்மை, நான் ஒன்னும் ஐட்டம் இல்லை என்று கூறிவிட்டு அழும் காட்சி என சமந்தாவால் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடியுமா? என்பதை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக அந்த குடோன் சீனில் சான்ஸே இல்லை, நடிப்பில் அசத்தியுள்ளார் சமந்தா.

ரம்யா கிருஷ்ணனின் திரையுலக வாழ்வில் இதுவரை அவருக்கு கிடைக்காத கேரக்டர். நீலாம்பரி, சிவகாமி கேரக்டரை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் உள்ளது அவரது நடிப்பு. அடிபட்டு கிடக்கும் மகனை காப்பாற்ற போராடும் காட்சி, நீ ஒழுங்கா இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா? என்று கணவன் மிஷ்கினிடம் புலம்பும் காட்சி, மருத்துவமனையில் டாக்டர்களிடம் கெஞ்சும் காட்சி, கடைசியாக மகனிடம் தனது தொழில் குறித்து விளக்கும் காட்சி அபாரமானவை. டாக்டர், வக்கீல் போல் இதுவும் ஒரு தொழில்தான் என்று மிக இயல்பாக மகனுக்கு புரியவைக்கும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வந்திருக்குமா? என்று தெரியவில்லை.

மிஷ்கின் பிரேயர் பண்ணும் காட்சிகள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும் விஜய்சேதுபதியும் மிஷ்கினும் இணையும் ஒரே ஒரு காட்சிதான் இந்த படத்தின் உயிர் என்று சொல்லலாம். இருவருக்கும் நடக்கும் அந்த உரையாடல் காட்சி முடிந்தவுடன் உண்மையிலேயே உடம்பு முழுவதும் புல்லரித்தது. இப்படி ஒரு காட்சி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே வந்திருக்காது. கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கேள்விக்க்கு ஒரு சிம்பிளான பதில் இந்த உரையாடலில் உள்ளது.

அதேபோல் அந்த மூன்று சிறுவர்களிடம் வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு பெண் பேசும் வசனங்கள் மனிதர்கள் என்றால் யார்? இறப்பு என்பது வருத்தப்பட கூடிய ஒரு விஷயம் இல்லை, அது நமது வாழ்வில் ஒரு பகுதி, நமது உடம்பில் இருக்கும் கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்பட்டாலும் அவை அனைத்தும் சேர்ந்ததுதான் உடம்பு, அதுபோல்தான் இந்த உலகமும் என்று மிகப்பெரிய தத்துவத்தை மிக எளிதாக புரிய வைப்பதெல்லாம் இயக்குனரின் தனித்தன்மை.

விஜய்சேதுபதியின் மகனாக நடித்திருக்கும் அந்த சிறுவனின் நடிப்பு கண்ணுக்குள்ளே இருக்கின்றது. நீ ஆம்பளையா இரு, இல்லாட்டி பொம்பளையா இரு, அது என்னோட பிரச்சனை இல்லை, ஆனா நீ எங்க கூட இரு என்று அப்பாவியாக பேசும் வசனம், ஒரு குழந்தை நட்சத்திரத்திடம் கூட இப்படி வேலை வாங்கியிருக்கின்றாரே என்று இயக்குனரைத்தான் பாராட்ட தோன்றுகிறது. அதேபோல் பகத் பாசில் வீட்டுக்கு வரும் சிறுவன் முதலில் சேட்டை செய்வதும், பின்னர் பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைவதும், பகத்பாசிலுக்கு அந்த அதிர்ச்சியுடன் டாட்டா சொல்வதும் என என்ன ஒரு நடிப்பு?

மேலும் இந்த படத்தின் கதைகளில் ஒன்றில் வரும் அந்த நான்கு சிறுவர்கள். யார் நடிப்பை புகழ்வது என்றே தெரியாத வகையில் அப்படி ஒரு நடிப்பு. அதுமட்டுமின்றி ரம்யாகிருஷ்ணனிடம் பேசும் டாக்டர், ஆட்டோ டிரைவர், நான்கு பசங்களை ஒரு ரவுடியிடம் கூட்டி செல்லும் நபர், மிஷ்கின் பிரேயரில் கலந்து கொண்டு 'நான் சாட்சி' என்று சொல்லும் பக்தர்கள், மிஷ்கினின் உதவியாளர் ராமசாமி என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் என ஒவ்வொரு சின்ன சின்ன கேரக்டர்களையும் இயக்குனர் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்.

மூன்று மணி நேரம் ஓடும் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்றாலும் யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைதான் இந்த படத்தின் முதுகெலும்பு. பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்களை எப்படி தேர்வு செய்தார்கள் என்றே தெரியவில்லை. அப்படி ஒரு பொருத்தம். 

பி.எஸ்.வினோத் அவர்களின் ஒளிப்பதிவு உலகத்தரம். பழைய கட்டிடங்களாக தேடித்தேடி கண்டுபிடித்து படமாக்கியுள்ளார்கள். குறிப்பாக அந்த பிளைட் காட்சியின் ஒளிப்பதிவு மிக அருமை. எடிட்டர் சத்யராஜ் நடராஜன் பணி அபாரம். மூன்று மணி நேரம் தாங்கும் அளவுக்கு படத்தில் விஷயம் இருப்பதால் படத்தின் நீளத்தை பெரிய விஷயமாக பார்க்காமல் எடிட் செய்துள்ளார். இருப்பினும் பகவதி பெருமாள் காட்சிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் எல்லோரும் பார்த்தே தீர வேண்டிய அருமையான படம். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா? என்பது நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த படம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும் ஒரு படமாகவே இருக்கும். இந்த படத்தின் விமர்சனத்தின் ஆரம்பத்தில் 'வாழ்வின் ரகசியம்' என்று பதிவு செய்துள்ளோம் அல்லவா? அதற்கும் ஒரு காரணம் உள்ளது. படம் பாருங்கள் புரியும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

Rating : 3.8 / 5.0