தங்க மாஸ்க்கை அடுத்து வைரலாகும் வைர மாஸ்க்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் முதல் மாநில சுகாதார அமைச்சகம் வரை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய வசதிக்கேற்றவாறு துணியால் மற்றும் மருத்துவ முறையால் தயார் செய்யப்பட்ட மாஸ்க்குகளை அணிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் புனேயில் உள்ள தொழிலதிபர் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து வலம் வந்தார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கம் மாஸ்க்கில் சிறுசிறு துளைகள் மூச்சு விடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாஸ்க்கை அணிந்து அவர் வெளியே வந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் அணிந்திருந்த தங்க மாஸ்க் பாதுகாப்பானது அல்ல என்றும், மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்கை அணியும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தங்க மாஸ்க்கை அடுத்து வைரக் கற்களால் அமைக்கப்பட்ட மாஸ்க் ஒன்றின் தகவல் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வைர மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த மாஸ்க்கை அமைத்த நகைக்கடைக்காரர் கூறியபோது ’வைரம் பதித்த தங்க மாஸ் வேண்டும் என்று தனது தங்களது வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாகவும், அவருக்கு திருமணம் என்பதால் இந்த மாஸ்க்கை அவருக்காக நாங்கள் டிசைன் செய்து கொடுத்தோம் என்றும் இந்த மாஸ்க்கில் 1.5 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்கள் பதித்து உள்ளதாகவும் தங்கமும் வைரமும் கலந்த இந்த மாஸ்க்கின் விலை ரூபாய் 4 லட்சம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மாஸ்க்கை தண்ணீரில் நனைத்து அலசி கொள்ளலாம் என்றும் மாஸ்க்காக மட்டுமின்றி இதுவொரு முதலீடாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாஸ்க்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.