தமிழிசையை விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூரியா ரசிகர்கள் மன்றம் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

அனிதா மரணம் மற்றும் நீட் குறித்து சூர்யா கூறிய கருத்துக்கு பதில் கூறிய தமிழிசை செளந்திரராஜன், 'நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறினார்

இந்த நிலையில் தமிழிசைக்கு சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழிசை அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று சூர்யா ரசிகர் மன்றத்தின் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

சூர்யா நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா எப்போதும் உறுதியாக இருப்பார். அகரத்தை பற்றியும், சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும். 'செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்' என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள் என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது. இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், தமிழிசை சவுந்தரராஜனை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

வாழ்த்து சொன்ன பிரபல நடிகரை வறுத்தெடுத்த ரஞ்சித்

சமீபத்தில் நீட் தேர்வை எதிர்த்து தன்னுடைய இன்னுயிரை நீத்த அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று இயக்குனர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

ரஜினியின் அடுத்த சமூக சிந்தனையுடன் கூடிய வாய்ஸ்

பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, நீட், அனிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த் தற்போது நதிகள் இணைப்பிற்காக மீண்டும் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரான சிம்பு இணைந்துள்ளார்.

முன்னணி தமிழ் நடிகர்களுக்கு சமமானவர் மகேஷ்பாபு: கலைப்புலி எஸ்.தாணு

நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பல பிரமுகர்கள் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் மகேஷ்பாபு: ஏ.ஆர்.முருகதாஸ்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.