'பேனர்' வைப்பதற்கு பதிலாக இதை செய்யுங்கள்! நடிகர் சூர்யா வலியுறுத்தல்

  • IndiaGlitz, [Sunday,September 15 2019]

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே கொதித்து எழச்செய்துள்ளது. பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் சமூக நல ஆர்வலர்களும் நீதிமன்றமும் வலியுறுத்தியதை அடுத்து தற்போது பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும், மாஸ் நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கடைபிடித்தால் தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து நேற்று சென்னையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் சூர்யா ’பேனர் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள்’ என்று அவர் தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். மேலும் அனைத்து ஊர்களிலும் தனது ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்வதாகவும், அதுமட்டுமின்றி ‘காப்பான்’ திரைப்பட வெளியீட்டின் போதும் யாரும் திரையரங்குகளில் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ’பிகில்’ திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார் என்பதும், மதுரை அஜித் ரசிகர்கள் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.