close
Choose your channels

'காட்மேன்' தொடருக்கு எதிராக பிரபல நடிகர் போலீஸில் புகார்

Sunday, May 31, 2020 • தமிழ் Comments

சமீபத்தில் காட்மேன்’ என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த டீசர் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

 நேற்று ஜீ தமிழ் டிவி-யின் ஜீ5என்கிற ஓடிடி தலத்தில் வரப்போகும் காட்மேன் என்ற இணைய தொடர் ஒன்றின் டிரெய்லரை பார்த்து பேரதிர்ச்சிக்குள்ளானேன். அது வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. அதில் பிராமண சமூகத்தை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது. சாமியார் வேடமிட்ட ஒருவர் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி நடித்திருக்கிறார். இது ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் தாக்கப்படக்கூடிய சூழலும், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த டிரெய்லரில் பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், மத நம்பிக்கைகள் பற்றியும் தவறான, கொச்சையான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிப்பிட்டு அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம், என்பது தெரிந்ததே.

கடந்த சில காலங்களாக ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஜாதியை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்களை ஊடகங்களில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது மேலும் தொடர்ந்தால் தவறான முன்னுதாரணமாகி தமிழகத்தை வன்முறைக்கு அழைத்து செல்லும். இந்த தொடரில் பணியாற்றியர் மூலமாக கேட்ட தகவல் படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவைப் பற்றியும் ஒரு கிறிஸ்துவ போலீஸ் அதிகாரியிடம் சொல்லி செய்யப்பட்ட கைது போன்ற வன்மமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அறிகிறோம். (நீங்கள் அதன் உண்மைத்தன்மயை அறியவும்)

இதில் நடித்த ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இணை இயக்குனர் ராஜா முகமது, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மற்றும் ஜீ5 சிஇஓ தருண் கதியால் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 153 (A), 504, 505 and தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2000 ன் 67 ஆகிய பிரிவுகளின் கீழ கைது செய்து, காட்மென் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த டிரெய்லரையும் தடை செய்ய வேண்டும். 

இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz