திரும்பத் திரும்ப வரும் காட்சிகளால் 'ஸ்வீட்ஹார்ட்' புளிக்கிறது!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் , அருணாச்சலேஸ்வரன், நடிப்பில் வெளியான படம் ' ஸ்வீட்ஹார்ட் '.
சிறு வயதில் தனது பெற்றோர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக திருமணம், குடும்பம், குழந்தை இவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் வாசு ( ரியோ), திருமணம், குழந்தைகள், குடும்பம் என ஏராளமான கனவுகளுடன் இருக்கும் மனு ( கோபிகா ரமேஷ் ). இவ்விருவருக்கும் நடுவில் ரிலேஷன்ஷிப். அதைக் காதல் என்னும் கனவுகளுடன் ஏற்றுக்கொள்கிறார் மனு, ஆனால் வாசுவுக்கு இது ஒரு ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப். இந்த வேண்டும் வேண்டாம் என்கிற விவாதத்தில் ஒருவருக்கொருவர் காதல் முறிந்து மோதலில் முடிகிறது. இருவரும் பிரேக் அப் என முடிவெடுத்து பிரிகிறார்கள். ஆனால் கர்ப்பம் என்கிற இடி வந்து விழ இருவரும் தவித்து போய் அடுத்தடுத்த சோதனைக் காலங்களை கடக்கத் துவங்குகிறார்கள். முடிவு என்ன என்பது மீதி கதை.
இதற்கு முன்பு பார்த்த படங்களை விட இந்தப் படத்தில் இன்னும் ஸ்மார்ட் ஆகவும், இளமையாகவும் தெரிகிறார் ரியோ ராஜ். அவருடைய இறுக்கமான முகம், எதையும் கண்டுகொள்ளாத மனநிலை, அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத குணம் என இந்த கதைக்கு மிகப் பொருத்தமாக நடிப்பை கொடுத்திருக்கிறார். இன்னும் சற்று பக்குவப்பட்ட நடிப்பையும் முகபாவனைகளையும் கற்றுக் கொண்டால் எதிர்வரும் காலங்களில் காதல் படங்கள் நடிக்க கதாநாயகர்கள் இல்லாத சூழலுக்கு ஆறுதலாக இருப்பார் ரியோ.
கோபிகா ரமேஷ் ... டிஜிட்டல் யுகத்தில் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு கோபிகாவின் முகம் நன்கு பரீட்சையம். அழகு, அப்பாவி முகம், கண்களில் எப்போதும் ஈரம் கசியும் ஒரு இயல்பான நடிப்பு, காதலுக்கான ஏக்கம் என அத்தனையும் அவர் முகத்தில் அவ்வளவு அசால்ட் ஆக வருகிறது. மொத்தக் கதையையும் தனது தோளில் தாங்கியிருக்கிறார் கோபிகா. அதைப்போல் அடுத்த கவனம் பெறுபவர் நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரன். எப்படி லவ்வர் படத்தில் ஆங்காங்கே கைத்தட்டல்களை பெற்றாரோ அதேபோல் இந்தப் படத்திலும் இப்படி ஒரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா என்கிற ஏக்கத்தையும் பல இடங்களில் சிரிப்பையும் வரவழைக்கிறார்.
எல்லாம் சரி ஆனால் ஏதோ ஒன்று குறைகிறதே என்பதற்கு ஏற்ப முதல் பாதி முழுக்க ஒரே இடத்தில் சுற்றுவதும் நான் லீனியர் கதை சொல்லாலாக பிளாஷ்பேக்கை திரும்பத் திரும்ப வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி சலிப்பை உண்டாக்குகிறது திரைக்கதை. ஒரு மொபைலை எடுக்க முடியவில்லை என்றால் கூட அதற்கு ஒரு பின்னணி கதை சொல்கிறார்கள், ஒரே ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு ஒரு அப்பார்ட்மெண்ட் பால்கனியிலேயே அரை மணி நேரம் கதை நகர்த்தியிருப்பது சோர்வடைய வைக்கிறது.
காலம் காலமாகவே அடங்காத ஹீரோ, அல்லது சீரியஸ் ரிலேஷன்ஷிப் மீது நம்பிக்கை இல்லாத நாயகன் அவரை திருத்த வரும் ஹீரோயின் இதெல்லாம் பார்த்துப் பழகிய பழைய 'பிரியமானவளே ' காலத்துக் கதை. இதை இனிமேலாவது மாற்றுவார்களா.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவில் காதல் காட்சிகளும் பாடல் காட்சிகளும், இளமைத்துள்ள கலர்ஃபுல்லாக வழங்கி அசத்தியுள்ளார். தயாரிப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார். தயாரிப்பாளராகவும் இயக்குனர் ஸ்வினீத் சுகுமார் எதிர்பார்த்த பட்ஜெட்டை மட்டுமின்றி ப்ரோமோஷனிலும் தன்னால் முடிந்த அளவிற்கு இறங்கி வேலை செய்து இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொடுக்கப்பட்ட உணர்வுபூர்வமான காட்சிகளும் வசனங்களும் ஓரளவிற்கு படத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறது.
மொத்தத்தில் 'ஸ்வீட்ஹார்ட் ' திரைப்படம் இளமை ததும்ப வெளியான ட்ரெய்லரைப் பார்த்து நம்பி உள்ளே போனவர்களுக்கு ஆறுதலாக ஒரு சில எமோஷனல் காட்சிகள் மிஞ்சும். அதுவும் ஒட்டவில்லை என்றால் சாரி பாஸ் நாங்கள் பொறுப்பல்ல.
Comments