டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்… கூடவே ஐசிசி பாராட்டு!!!
ஆஸ்திரேலியாவுடனான இந்தியக் கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் முதலில் வலைப்பந்து வீச்சாளராக மட்டுமே அங்கு சென்றார். இப்படி சென்ற அவரது பயணம் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இடம் பெற்று ஒருநாள் அணி வீரராக அறிமுகமானார். அதில் தன்னுடைய அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
அடுத்து டி20 போட்டியில் கலந்து கொண்டு அதிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார். அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பும்ராவின் காயம் காரணமாக 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கான போட்டி தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வேட்டை அவுட்டாக்கி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே பயணத்தில் (ஆஸி. பயணம்) இடம்பெற்று ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்தான்” என ஐசிசி தனது டிவிட்டரில் நடராஜனுக்குப் பாராட்டு தெரிவித்து உள்ளது. தற்போது பிரிஸ்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனைத் தவிர ரஞ்சி அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்று இருக்கிறார். இதனால் இரண்டு தமிழக வீரர்கள் ஒரே போட்டியில் அறிமுகமாவது ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.