இதெல்லாம் ஒரு கேள்வியா? உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்விக்கு நடிகை டாப்ஸி காட்டம்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை டாப்ஸி தொடர்ந்து சமூக விஷயங்களில் தலையிட்டு கருத்து கூறி வருகிறார். முன்னதாக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு போராட்ட விஷயத்தில் வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த இந்தியப் பிரபலங்களையும் கிண்டல் செய்து இருந்தார். அவர் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் குழு எழுப்பிய ஒரு கேள்விக்கு கடும் கண்டம் தெரிவித்து உள்ளார். இவரோடு சேர்ந்து பல சமூக ஆர்வலர்களும் நீதிபதிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அரசாங்க ஊழியர் மோகித் சுபாஷ் சவான். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 16 வயதே ஆன சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிகழ்வை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்து உள்ளார். ஆனால் மோகித்தின் அம்மா பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அணுகி, தவறு நடந்துவிட்டது, உங்களது பெண்ணை என்னுடைய பையனுக்கு திருமணம் முடித்து வைக்கிறேன் என உத்தரவாதம் அளித்து உள்ளார். மேலும் சிறுமிக்கு 18 வயது வந்தவுடன் இத்திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்.

இவரது பேச்சை நம்பிய பாதிக்கப்பட்ட குடும்பமும் பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்று உள்ளது. ஆனால் திருமண வயதை எட்டிய பாதிக்கப்பட்ட சிறுமி தனக்குக் கொடுமை செய்த ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள மறுத்து இருக்கிறாள். இதனால் இந்த வழக்கில் சம்பந்தபட்ட அந்த ஆசாமியும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

இதனால் மனம் நொந்துபோன பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் தற்போது நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இதனால் போக்ஸோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த வழக்கின் விசாரணையை அடுத்து மோகித் தனக்கு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த ஜாமீன் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஏ.எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு பாலியல் வன்கொடுமை செய்த மோகித்திடம் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பி இருக்கிறது. ஆனால் இதில் ஒரு கேள்விக்கூட பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு சாதகமாகவோ அல்லது அவரின் நலனைக் கருத்தில் கொண்டே அமையவில்லை. அந்தக் கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏ.எஸ்.போப்டே தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா? எனக் கேட்டு உள்ளனர். மேலும் நாங்கள் உங்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. உங்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் எனக் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த மோகித், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இப்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனவே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள் “அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியும். இல்லையென்றால் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறை செல்ல நேரிடும். மேலும் அரசு வேலையும் பறிபோகும் எனக் கூறி இருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகளைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்த நடிகை டாப்ஸி, “இந்தக் கேள்வியை யாராவது அந்தப் பெண்ணிடம் கேட்டார்களா? பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்தப் பெண் மணக்க விரும்புவாளா? இதெல்லாம் ஒரு கேள்வியா? இது தீர்வா? அல்லது தண்டனையா? என தனது டிவிட்டரில் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பதிவை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் விவகாரம் தற்போது வெளிச்சம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.