தாடி வளர்க்கனும்… புர்க்கா வாங்கனும்… ஆப்கனில் இருந்து கதறும் மக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஏற்கனவே கடந்த 2001 வாக்கில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளனர். அந்த மோசமான அனுபவம்தான் தற்போது ஆப்கன் மக்கள் காபூலை விட்டு சென்றுவிடவேண்டும் என்று துடிப்பதற்கும் காரணமாக இருக்கிறது. இதனால் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ள மக்கள் விமானத்தின் டயரைப் பிடித்து தொங்கி பயணம் செய்யும் அளவிற்கு துணிந்து விட்டதையும் பார்க்க முடிகிறது.

இதற்கு மாறாக குடும்பம், குழந்தைகளுடன் வசிக்கும் சிலர் இப்போதே தாடி வளர்த்துக் கொள்ள வேண்டும், வீட்டில் உள்ள பெண்களுக்கு எல்லாம் புர்க்கா வாங்க வேண்டும் என்று பீதியுடன் இருக்கின்றனர். மேலும் அங்குள்ள சிறு வணிகர்கள் இனிமேல் எந்த வெளிநாட்டு மக்களும் காபூலுக்கு வரமாட்டார்கள். அதனால் வணிகம் செய்வதையே இனி மறந்துவிட வேண்டியதுதான் எனவும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் என்ற பீதி இப்போதே துவங்கிவிட்டது. இதுகுறித்து தாலிபான் தலைவர்களுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “பெண்கள் சமூகத்தில் செயல்பூர்வமாக இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியம் என்ன சொல்லுகிறதோ அந்த சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தான்” என்று தெரிவித்து இருப்பது மேலும் பயத்தை ஏற்படுத்துகிறது.

இதைத்தவிர பெண் செய்தியாளர் ஒருவர் முதன் முறையாக தாலிபான்களுடன் நேரடியாக பேட்டி எடுத்துள்ளார். அதில் பெண்களின் சுதந்திரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபான்கள், “ஷரியா சட்டத்தின் கீழ் பெண்ணுரிமை காக்கப்படும்” என்று பதில் அளித்துள்ளனர். மேலும் “பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து அவர்களை ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?“ என கேட்டபோது பேட்டியை நிறுத்திக்கொண்டதோடு ஒரு தாலிபான் இது என்ன கேள்வி என்று சிரிக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது.

தாலிபான்களை பொறுத்தவரைக்கும் ஷரியா சட்டத்தின்படி பெண்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிவருவகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்துப் பெண்களும் தற்போது வீடுகளுக்குள் முடங்கிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த 90 வாக்கில் தாலிபான்கள் கொண்டுவந்த ஷரியத் சட்டத்தின்படி பெண்கள் கல்வி கற்கக்கூடாது, ஒருவேளை படித்து முடித்து வேலைக்குச் சென்றாலும் ஆண்கள் துணையில்லாமல் வெளியிடங்களில் நடமாடக்கூடாது, பெண்கள் அனைவரும் கட்டாயம் புர்க்கா போடவேண்டும், ஏன் சந்தைக்கு செல்வதாக இருந்தால் கூட ஆண்களின் துணையில்லாமல் செல்லக்கூடாது.

இப்படி கடுமையான சட்டவிதிகளுக்கு இடையில் விதிகளை மீறினால் பெண்களுக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படும். அதோடு பொது இடங்களில் மரணத்தண்டனை, கல்லெறிந்து கொல்லுதல் வரை அவர்களின் தண்டனை முறையும் பார்ப்போரை பதைக்க வைக்கும் வகையில் அமைந்து இருக்கும். இப்படியான நெருக்கடிக்குள் இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இனி வாழ வேண்டியிருக்கும். ஒருவேளை தாலிபான்களை எதிர்த்து புரட்சி வெடித்தால் ஒழிய இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியே கிடையாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருப்பதும் இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.