தமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்! 

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து காலமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்பட ஒரு சிலர் காலமாகி வருவது பெரும் அதிர்ச்சியை திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய அய்யப்பன் கோபி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு நடிப்பு என்றால் உயிர் என்பதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விட வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்ததில் இருந்து அவர் நடிப்பின்மேல் எந்த அளவுக்கு பிரியர் வைத்திருந்தார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் ’ரஜினி முருகன்’ படத்தில் நடித்த பவுன்ராஜ் என்ற நகைச்சுவை நடிகர் காலமானார் என்ற செய்தியையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் மறைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.