சொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்!

ஏழை, எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. இதற்காக வங்கிகளில் உள்ள நகைக் கடன் விவரங்களை சேகரிக்கிறது. இதன் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர்களின் நலன் காத்திடும் வகையில் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர ரொக்கமாக ஆயிரம் ரூபாய் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26 ஆம் தேதி சட்ட பேரவையில் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை வைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல கூட்டுறவு வங்கிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை நகைக்கடன் தள்ளுபடி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இதனால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகள் விரைவில் உரியவர்களிடம் வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்ட வருவதும் குறிப்பிடத்தக்கது.