பாடபுத்தகங்களில்  தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....!சீமான் காட்டம்....!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]



பாடபுத்தகங்களில் இடம்பெற்றுள்ள தமிழர்கள் வரலாறு அவதூறாக உள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகவே திட்டமிட்டு செய்யப்படுவதுபோலவும் அமைந்துள்ளது. இதுபோன்ற பொய் உரைகளை தடுக்க உலகத்தமிழர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் , ‘அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஈழத்தின் பூர்வக்குடிகள் தமிழர்கள் இல்லை எனவும், தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களைத் துன்புறுத்தினர் எனவும், தமிழர்கள் போராடியதால்தான் கொல்லப்பட்டனர் எனவும் கற்பனைகளை உருவாக்கி, உண்மைக்குத் துளியும் தொடர்பில்லாத பொய்களை தமிழர் இன வரலாறாக மாற்ற முனையும் வன்மச்செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. யாழ் நூலகம் சிங்களர்களால் எரியூட்டப்படவில்லையெனவும், தமிழக மன்னர்கள் படையெடுத்தப் பின்புதான், தமிழர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர் எனவும், சிங்களர்களின் வருகைக்குப் பிறகே, இலங்கையின் வரலாறு தொடங்குகிறது எனவும் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்டு, ஈழ வரலாறே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறொரு கோணத்தில் எழுதப்பட்டிருப்பது உலகத்தமிழர்களை உள்ளம் கொதிக்கச்செய்கிறது.


இலங்கை அரசின் பாடப்புத்தகங்களே தமிழர்களின் சமயத்தை சைவம் எனக் குறிப்பிடும்போது, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இப்பாடநூல்களில் தமிழர்களை, ‘இந்துக்கள்’ எனக்குறிப்பதன் மூலம் , சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையை பௌத்த மதத்தினருக்கும், இந்து மதத்தினருக்குமான மத மோதலாக சுருக்கி, காட்ட முனையும் சூழ்ச்சி அம்பலமாகிறது. இவ்வாறு தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக்கூறி, அடுத்த தலைமுறைப்பிள்ளைகளுக்குத் தவறாகக் கற்பிப்பதன் மூலம் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தி, அவர்களது தாயகப்பற்றையும், இன உணர்வையும் மழுங்கடிக்கச்செய்யும் வஞ்சகச்செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பது தெளிவாகிறது.

உலகின் மூத்தத் தொல்குடி சமூகமான தமிழினத்தின் பழம்பெருமையையும், பெரும்புகழையும் பறைசாற்ற வரலாற்றுச்சான்றுகள் இல்லாது இலக்கியச்சான்றுகளே தரவுகளாக இருப்பது எந்தவொரு இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாப் பெருந்துயரமாகும். இத்தகைய துயர்மிகு நிலையில், ‘வரலாற்றில் அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே படைப்பார்கள்’ எனும் அண்ணல் அம்பேத்கரின் முதுமொழிக்கேற்ப, தமிழர்களின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி, இன ஓர்மையடைந்து மீளெழுச்சிகொள்வதற்கும், இழந்தத் தாயகத்தை போராடி மீட்டெடுப்பதற்குமாக வருங்கால தமிழ்த்தலைமுறையினருக்குக் கொண்டுசேர்ப்பதென்பது தலையாயக் கடமையாகும். அதனைத் தகர்த்து முறியடிக்கும் வகையில் நடைபெறும் இத்தகைய ஈனச்செயல்கள் பெருஞ்சினத்தைத் தருகிறது.

ஆகவே, புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக ஒரு சில அமைப்புகளால் பாடநூட்கள் எனும் பெயரில் திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், உள்நோக்கத்துடனான பொய்யுரைகளையும் தடுத்து முறியடித்து, தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலைநிறுத்த துணைநிற்க வேண்டுமென உலகத்தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

More News

போதைப்பொருள் விவகாரம்… நடிகை சஞ்சனா கல்ராணி சிறைக்கு செல்கிறாரா?

பாலிவுட் சினிமா உலகில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னரே போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது

வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சல்: பணமோசடி விவகாரம் குறித்து ஆர்யா

பிரபல நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பின் அட்டகாசமான புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

நடிகர் ஆர்யா மோசடி வழக்கில் திடீர் திருப்பம்: போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு

நடிகை ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி  ரூ.71 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் தற்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்

ஒலிம்பிக் பதக்க வீராங்கனையுடன் நடிகை ராதிகா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.