"என்னைப் போலவே விளையாடும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா"..?! சச்சின் டெண்டுல்கரின் பதில்.

சச்சின் டெண்டுல்கர் முதன் முதலாக ஆஸ்திரேலியா சென்று ஆடிய போது சிட்னியில் ஒரு சதமும் பிறகு அதிவேக பெர்த் பிட்சில் இன்னொரு அபார சதமும் எடுத்த போது ஆஸ்திரேலியாவின் எக்காலத்துக்குமான நட்சத்திரமான டான் பிராட்மேன், ‘இந்தச் சிறுவன் என்னப்போலவே ஆடுகிறான்’ என்று கூறியது உலகப்புகழ் பெற்றது என்பதோடு சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையையே பெரிய அளவில் மாற்றியது பலருக்கும் நினைவிருக்கலாம்.

ஞாயிறன்று ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்காக நடக்கும் போட்டிக்காக ஒரு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரிடம் இவர் ஆடிய காலத்தில் உச்சத்தில் இருந்த போது ஆடியது போல் தற்கால கிரிக்கெட்டில் யார் இவருக்கு தன்னை நினைவு படுத்துகிறார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்கு ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன் என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு ஒரு ஆச்சரிய பதிலை சச்சின் வைத்துள்ளார். சச்சின் கூறியது யாரைத் தெரியுமா? அவர்தான் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன்.

“நன் லார்ட்ஸில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியை சமீபமாக பார்த்தேன். ஸ்டீவ் ஸ்மித் காயமடைந்த பிறகு லபுஷேன் 2வது இன்னிங்சில் ஆடியதைப் பார்த்தேன். நான் என்னுடைய மாமனாருடன் அமர்ந்திருந்தேன். மார்னஸ் லபுஷேன் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2வது பந்தில் அடி வாங்கினார். ஆனால் அதன் பிறகு ஒரு 15 நிமிடம் அவரது பேட்டிங்கைப் பார்க்க வேண்டுமே.. நான் கூறினேன், “இந்த வீரர் நிச்சயம் ஒரு ஸ்பெஷல்தான்” என்றேன். அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அவரது கால்நகர்வு துல்லியமாக உள்ளது, கால்நகர்வு என்பது வெறும் உடல் ரீதியானது அல்ல, அது மனரீதியானது. ஏனெனில் மனத்தளவில் உங்களுக்கு பாசிட்டிவ் எண்ணம் இல்லையெனில் கால்நகர்த்தல் சரியாக வராது, கால் நகராது. அடிவாங்கிய பிறகு மனத்தளவில் வலிமையானவராக இல்லையெனில் கால் நகராது. லபுஷேன் கால்நகர்த்தல் ஒப்பிட முடியாதது” என்றார்.

மார்னஸ் லபுஷேன் கடந்த ஆண்டு 1104 ரன்களை எடுத்தார். ஆஷஸ் தொடரில் 4 அரைசதங்களுடன் 353 ரன்களை 50.42 என்ற சராசரியில் எடுத்தார். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய கோடைக்கால சீசனில் லபுஷேன் 896 ரன்களை 4 சதங்களுடன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு எப்போதும் ஒப்பீடுகள் பிடிக்காது. என்னை பலருடன் ஒப்பிடப் பார்த்தனர், எங்களை எங்களாகவே இருக்க விடுங்கள். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம். அவர்கள் இருவரின் ஆட்டங்களையும் மகிழ்ச்சியுடன் பார்ப்போம். ஸ்மித்தும், கோலியும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். அவர்கள் ஆடுவதைப் பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியே, என்றார் சச்சின்.