close
Choose your channels

இந்திய எல்லையில் நிலவும் பதற்றம்!!! தற்போதைய நிலைமை என்ன???

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments

இந்திய எல்லையில் நிலவும் பதற்றம்!!! தற்போதைய நிலைமை என்ன???

 

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்து வருகிறது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர தற்போது சீன எல்லையை ஒட்டி போர் விமானங்களை நிறுத்தி இருப்பது போன்ற புகைப் படத்தையும் சீனா ஊடகம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒன்றும் மே 21 ஆம் தேதி மற்றொன்றும் எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. புகைப்படத்தின் உள்ள விவரங்கள் திபெத் நிக் குன்சன் விமான நிலையத்தைக் காட்டுவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அந்த விமான நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் போர் விமானங்களில் ஒன்று ரஷ்யாவின் சுகோய் 27 ரக போர் விமானம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் போர் விமானத்தைப் போல சீனாவும் போர் விமானங்களைத் தயாரித்து இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதைத்தவிர ஜே 11, ஜே 16 ரக போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விமானங்களைக் குறித்து கருத்துத் தெரிவிக்கும் இந்திய இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரி ஒருவர், இந்த விமானங்கள் பெரும்பாலும் எரிபொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப் பட்டு இருக்கலாம். மேலும், இந்த விமானங்களால் அதிகப் பட்சம் 3 அல்லது நான்கு மணிநேரத்திற்கு பறக்க முடியும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலைமையைச் சமாளிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகிய 3 பேரும் கலந்து கொண்டர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்பு சீனாவிற்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக “இந்திய எல்லையில் எந்த மாற்றத்தையும் நாங்கள் விரும்பவில்லை” என்ற செய்தி அறிக்கையை இந்தியா வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியான உடன் சீனாவின் தரப்பில் இருந்து “எல்லையில் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதை முதலில் இந்தியா நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு இந்தியா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் “இராணுவ வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு போருக்கு தயாராக இருங்கள், அனைத்துப் படைகளையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள், இராணுவ ஆட்சி பலமாக இருப்பதால் தான் நாம் கொரோனாவை வென்று விட்டோம். பலத்த ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம்” இது என்று பேசியிருக்கிறார். சீன அதிபரின் இத்தகைய பேச்சு இந்தியா, சீனா இடையே கடுமையான போருக்கு வழிவகுக்கும் என்று தற்போது இந்திய ஊடகங்கள் அச்சத்தை தெரிவித்து வருகின்றன.

நேபாளம், இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளையும் இணைக்கும் இடமாக இருக்கும் டோக்லாம் பகுதிக்குத்தான் பல வருடங்களாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இந்த பகுதிக்குச் சொந்தம் கொண்டாடி நேபாள இராணுவம் இந்திய இராணுவத்துடன் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நோபளம் சீனாவிற்கு ஆதரவளிக்கும் விதமான இத்தகைய செயலில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டை பாதுகாப்பு தளபதி எம்எம் நாரதேவ் வலியுறுத்தி இருந்தார். இந்த வார்த்தைகளை நேபாள பாதுகாப்பு துறை அமைச்சர் பெரும் அரசியலாக்கி இந்தியா, நோபளத்தை அவமானப்படுத்தி விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். எல்லைப் பகுதிளை தவிர சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் தென் சீனக் கடல் சச்சரவு வேறு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனப்போருக்குப் பின்பு 1962 இல் இருந்து எல்லைப் பகுதிகளை சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மே மாதம் 8 ஆம் தேதி இந்திய இராணுவம் லடாக்கை ஒட்டிய பாங்காங் ஏரிப்பகுதியில் சாலைகளை போட்டு இருக்கிறது. தற்போது இந்தச் சாலைப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் சீனா இராணுவ வீரர்களைக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் எல்லைக் கோட்டுப் பகுதியை அடுத்த லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லையில் இருக்கும் சுமார் 255 கிலோ மீட்டர் தொலைவிற்குத்தான் தறபோது சச்சரவு ஆரம்பித்து இருக்கிறது. இந்த 255 கிலோ மீட்டர் தொலைவில் சீனாவும் சாலைகளை அமைத்து இருக்கிறது. இந்தியா தற்போது அப்பகுதியில் சாலைகளைப் போடும் பணியில் தீவிரமாக இறங்கிய நேரத்தில்தான் பிரச்சனை வெடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா அமைத்திருக்கும் சாலையின் வழியாக சீன எல்லைக்கு வேகமாக கடந்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாலையைத் தவிர சிறு சிறு பாலங்களையும் இந்தியா அப்பகுதியில் போட்டு இருக்கிறது. அதைத்தவிர இந்திய எல்லைப்பகுதியை ஒட்டி தௌலத் இராணுவ விமானத் தளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா லடாக் பகுதியல் கி ஷியோக், மூர்கோ, தவுலத் இந்த 3 பகுதிகளையும் இணைக்கும் விதமாக விமான நிலையமும், சீன எல்லை பகுதியை ஒட்டி சாலையும் அமைத்து இருப்பதுதான் சீனாவிற்கு ஆத்திரத்தை மூட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சீனாவிற்கு எதிராக இந்தியாவும் இராணுவ வீரர்களைக் குவித்து வந்தாலும் இந்தியா போரை விரும்பவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது. நேற்றில் இருந்து இராணுவ அதிகாரிகளின் சார்பாக சீனாவுடன் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அது கைக்கொடுக்க வில்லை என்றும் எதற்கும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே லடாக் பகுதியைக் குறித்து எழுந்த சச்சரவை அஜித் தேவால் அசாத்தியமாகக் கையாண்டார் என்றும் இப்போதும் பேச்சுவார்த்தைக்கு இந்தியா இவரையே நம்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக கொரோனா பரவல் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையே கடுமையான பனிப்போர் ஆரம்பித்து இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தவுடன் கொரோனா விஷயத்தில் சீனாவோடு முரண்பட்ட பல உலக நாடுகளும் தைவானுக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்தன. இந்நிலையில் கடந்த வாரம் தைவானுக்கு ஆதரவாக இந்தியாவும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தது.

சர்வதேச அரசியல் வட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையே இருக்கும் பகை முரணும், காலம் காலமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையும் தற்போதைய நிலையில் ஒன்று கோர்த்துக் கொண்டு பெரும் சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இது போதாது என்று இன்னொரு பக்கம் இந்தியாவில் கொரோனா பரவல் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் வேலையிழப்பு, பொருளாதாரச் சரிவு இதைத்தவிர கொரோனா பாதிப்புக்கு நடுவில் எல்லைப் பிரச்சனையும் சேர்ந்து பெரும் தலைவலியை இந்தியா உணரப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Get Breaking News Alerts From IndiaGlitz