சாலையில் சுருண்டு விழுந்த குட்டி யானையை காப்பாற்றிய இளைஞர்… நெகிழ்ச்சி வீடியோ!!!

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

 

தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் ஒரு மாத குட்டி யானை ஒன்று நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்தது. இந்த யானையை இளைஞர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார். மேலும் அந்தக் குட்டி தன்னுடைய குடும்பத்தோடு சென்று சேருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியில் குடும்பத்தோடு சேர்த்தும் இருக்கிறார். இந்நெகிழ்ச்சி நிரம்பிய சம்பவத்தை சாலையில் வந்த அனைவரும் கூட்டாக நின்று கண்ணீர்மல்க பார்த்தனர்.

தாய்லாந்தின் சாந்தபுரி மாகாணத்தின் நெடுஞ்சலை ஒன்றில் அனன் எனும் 53 வயதான நபர் இரவு நேரத்தில் பைக் ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஒரு குட்டி யானை வந்திருக்கிறது. ஏற்கனவே சாலை முழுவதும் இருட்டாக இருந்த நிலையில் குட்டி யானை வந்தது தெரியாமல் அந்த யானையின்மீதே வண்டியை ஏற்றி இருக்கிறார் அனன். இதனால் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்.

பைக் மோதியதில் அந்தக் குட்டி யானை நடு சாலையிலேயே சுருண்டு விழுந்திருக்கிறது. இதை அருகில் இருந்த பார்த்த பலரும் செய்வதறியாது திகைத்து நின்றபோது மனா ஸ்ரீவேட் எனும் இளைஞர் அங்கு வருகிறார். அவர் யானையின் நெஞ்சில் தனது கைகளை வைத்து சிபிஆர் முதலுதவி கொடுக்கிறார். இப்படி 10 நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த யானை மூச்சு விடத் தொடங்குகிறது. இதனால் எழுந்து நடக்கவும் செய்கிறது. அந்த யானையை அதன் அம்மாவோடு சேர்த்து வைக்கவும் அங்கிருந்தவர்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர்.

ஒருவழியாக தனது அம்மாவையும் அந்தக் குட்டி யானை கண்டுபிடிக்கிறது. இந்நெகிழ்ச்சி சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனால் இளைஞர் ஸ்ரீவேட்டுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நான் 26 வருடங்களாக மருத்துவப் பணியாற்றி வருகிறேன். ஆனால் முதல் முறையாக ஒரு யானையைக் காப்பாற்றி இருக்கிறேன் என கண்ணீர் மல்க ஸ்ரீவேட்டும் தனது உணர்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.