நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ’நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில்தான் கடைசியில் நடித்தனர். கே பாலச்சந்தர் இயக்கிய இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று ஒருவருக்கொருவர் முடிவு செய்து தனித்தனியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் கமல் ரஜினி இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை தற்போது ’மாஸ்டர்’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப்பின் கமல், ரஜினி இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் ரஜினி ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது திரைத்துறையிலும் இணைய உள்ளனர் என்ற செய்தி கமல், ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாக உள்ளது.