ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 'தலைவி' படக்குழு கொடுத்த ஆச்சரிய அறிவிப்பு
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ’தலைவி’ என்ற பெயரில் தயாராகி வருவது தெரிந்ததே. ஜெயலலிதாவின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சமீபத்தில் நடிகை பூர்ணா இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அடுத்து ’தலைவி’ படக்குழுவினர் ஜெயலலிதா கேரக்டர் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனாவின் போஸ்டரும் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் போஸ்டர்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில், விஷால் விட்டல் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் வரும் ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.