'தளபதி 64' குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது அவர் ’தளபதி 64’ என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

'கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வரும் இந்த படத்தில் சாந்தனு மற்றும் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில செய்தி இணைய தளங்களில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மாறவிருப்பதாகவும் இந்த படத்தை வேறு ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.

ஆனால் இந்த தகவலை ’தளபதி 64’ படத்தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

’தளபதி 64’ படத்தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விளக்கத்தையடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.