தருணம் : காதலும் கொலையும் இரண்டறக் கலந்து கபடி ஆடும் தருணம் !
ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிரஷன் தாஸ் , ஸ்ம்ருதி வெங்கட் , கீதா கைலாசம், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தருணம்.
சென்ட்ரல் ரிசர்வ் காவல் படையில் பணியாற்றும் அர்ஜுன் (கிஷன் தாஸ்), தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீரா (ஸ்ம்ருதி வெங்கட்) இருவரும் காதலர்கள். மீரா எதையும் கூலாக எடுத்துக்கொள்ளும் இக்கால தலைமுறை பெண். மேலும் ஆண் பெண் நடப்பிலும் நல்லது கெட்டது என அறிய அவசியம் இல்லை என்னும் மனநிலை கொண்ட ஜாலியான மனம் கொண்டவர். அவருக்கு பக்கத்து வீட்டு நண்பரான ரோகித் ( ராஜ் அய்யப்பா) உடன் நட்பு. ரோகித்துக்கு தனியாக இருக்கும் மீரா மேல் ஒரு கண். இருவரும் நிச்சயதார்த்தம் திருமணம் என தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ரோஹித் இறந்து கிடக்கிறார். கொலைக்கான பின்னணி என்ன யார் குற்றவாளி இவர்கள் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
கிஷண் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இவ்விரு ஜோடியுமே புதிதாகவும் இளமையாகவும் படம் முழுக்க காட்சி தருகிறார்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இருவருமே ரொமான்ஸ் காட்சிகளிலும் அருமையாகவே நடித்திருக்கிறார்கள். இருவரின் தோற்றமும் கூட ட்ரெண்டியாக கையாளப்பட்டிருப்பது படத்திற்கு மற்றொரு சிறப்பு. சமீப காலமாக வெற்றியடைந்த பல படங்களில் பால சரவணன் எதார்த்த காமெடி வசனங்கள் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படமும் அப்படித்தான் பல இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார். ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம் அத்தனை கேரக்டர்களும் கதையில் தங்களது பொறுப்பை உணர்ந்து அளவான நடிப்பை தேவையான இடங்களில் கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய ரிசர்வ் போலீஸ் என்பதால் அவர்களுக்கு உடற்கட்டமைப்பு மற்றும் சிக்ஸ் பேக் போன்றவை தேவையில்லை என்னும் லாஜிக் உட்பட பார்த்து பார்த்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். படம் முழுக்கவே கொலையும் கொலைக்கான காரணங்கள் என அத்தனையிலும் எதார்த்தமான லாஜிக்கையும் நமக்கு ஏற்படும் கேள்விகளுக்கான பதிலுமாக திரைக்கதை நகர்கிறது. படப்பிடிப்பு துவங்கியது முதல் இது ரொமான்டிக் காதல் கதை என நினைத்திருந்த நமக்கு இது ஒரு க்ரைம் திரில்லர் என்னும் முதல் அதிர்ச்சியில் இருந்து படம் முடியும் வரை அந்த விறுவிறுப்பு குறையவில்லை.
ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவில் படத்தின் முதல் பாதியில் வரும் ராணுவ காட்சிகள் பாடல் காட்சிகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் கொலை என ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு விஷுவல் விதவிதமான கலர் டோன்களில் கொடுத்திருக்கிறார். எடிட்டர் அருள் சித்தார்த், கொலை களத்தில் நிகழும் காதல் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளை சேர்த்து எடிட் செய்து இருக்கலாம். மிகச் சில இடங்களில் சற்று நீண்ட காட்சிகளாக தென்படுகின்றன. தர்புகா சிவா இசையில் எனை நீங்காதே நீ பாடல் பிளே லிஸ்ட் ரகம்.
ஒரு சில லாஜிக் , பார்வையாளனுக்கு எழும் சில கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லியிருக்கலாம். ' தேஜாவு' பட இயக்குனரின் அடுத்த படம் என்கையில் படத்தின் திரைக்கதையிலும் இன்னும் சற்று முக்கியத்துவம் தேவைப்படுகிறது.
மொத்தத்தில் பிராக்டிகலான பதில்களுடன் ஒரு கிரைம் காதல் திரைப்படம் பார்க்க நினைப்போருக்கு நல்லதொரு திரை தருணத்தை உருவாக்கும் இந்த தருணம்.
Comments