கொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு!!!

 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்தது 4-5 நாட்களில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்த குறைந்தது 8 நாட்களைக்கூட எடுத்துக்கொள்ளும் என புதிய ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் குறைந்த அளவிலான நோயாளிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதால் 4 நாட்களில் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா முதலில் பாதிப்பை ஏற்படுத்திய வுஹான் மாகாணத்தில் 1,084 கொரோனா நோயாளிகள் மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வில் பீஜிங்கில் உள்ள சீன மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சோங் யூ புதிய முடிவை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அறிவியல் ஆய்விதழில் கட்டுரை வெளியிட்ட சீன விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்று அடைகாத்து அதன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்த 8 நாட்களை எடுத்துக் கொள்கிறது எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் சராசரியாக 7.75 நாட்கள் அடைக்காக்கிறது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அடைகாப்பது என்றால் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலுக்குள் புகுந்து அவரின் செல்களைத் தாக்கி பல்லாயிரக்கணக்கான பிரதியெடுத்து பின்பு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்போது வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு இடைப்பட்ட காலத்தை குறிக்கிறது.

மேலும் இந்த ஆய்வில் 10% நோயாளிகளுக்கு அடைகாக்கும் காலம் 14.28 நாட்களாக இருக்கிறது. அப்படியென்றால் 10% கொரோனா நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு குறைந்தது 14 நாட்கள் கழித்தே அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதனால் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கையில் மிகவும் குழப்பம் வரும் எனவும் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடைய நபர் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என சாதாரணமாக இருந்துவிடக் கூடாது எனவும் அந்த விஞ்ஞானிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.