close
Choose your channels

உலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...

Saturday, May 30, 2020 • தமிழ் Comments

உலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...

 

வரலாற்றில் நிகழ்ந்த 100 வருடப் போரைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். பிரான்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் கடுமையான வாரிசு போரை நடத்தியது. அப்படி நடந்த போரில் தனது நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயதான வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” களத்தில் இறங்கி கடுமையான போரை நடத்தினார். அவர் 1431 இல் ரோவன் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களை பெரும்பான்மையாக கொண்ட நீதிமன்றத்தால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டார்.

ஜோன் ஆஃப் ஆர்க் எனப்பட்ட இந்த மங்கை ஒரு பெரிய ராஜாவிற்கு மகளாகப் பிறந்து இவ்வளவு பெரிய வெற்றியையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் அடிப்படையிலே இறை நம்பிக்கை கொண்டவராக வளர்க்கப்பட்டார். தனது இளமைக் காலத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் குட்டி குட்டிப் போர்களை தனது கண்ணால் பார்க்கிறார். போரின் தாக்கம் இவரை பிடித்துக் கொள்கிறது. தன்னை இறைவன் போர் செய்யத்தான் அனுப்பியிருக்கிறார், என்னை சார்லஸ் அரசரிடம் அழைத்துச் செல்லுங்கள் என பெற்றோரிடம் அடம்பிடிக்கிறார். கிட்டத்தட்ட 11 நாட்கள் பயணம் செய்து மன்னனுக்கு முன்னால் நேரடியாக நிறுத்தப்படுகிறார். அப்போது அவருக்கு வயது 17. இதற்கு முன் தனது கிராமத்தை தாண்டி வேறு எங்குமே சென்றதும் இல்லை. படிப்பு அறிவும் இல்லை. வெளி அனுபவம், போர் அனுபவம் எதுவுமே கிடையாது.

ஆனால் பேச்சில் கடும் துணிச்சல் இருந்தது. தனது எதிரி இங்கிலாந்து காரன் என்ற வெறி இருந்தது. இதைப் பார்த்த சார்லஸ் மன்னன் சில குதிரைகளையும் வீரர்களையும் இவரிடம் ஒப்படைத்து போருக்கு அனுப்பினார். தொடர்ந்து பல குட்டி போர்களில் இவர் வெற்றிகளைக் குவித்தார். அதில் முக்கியமானது, ஆர்லியன்ஸ் கோட்டையை இங்கிலாந்தின் பிடியில் இருந்து மீட்டது எனலாம். அடுத்து நடைபெற்ற ஒர்லியன் போரில் இவர் படுகாயமடைந்து தோற்றுப் போனார். இதற்கு நடுவில் VII சார்லஸ் மன்னன் தனது நாட்டை விரிவாக்கி ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டிற்கும் மன்னனா முடிச்சூட்டிக் கொள்கிறார். அப்படி பிரான்ஸ் அரசை மீட்டதில் ஜோன் ஆஃப் ஆர்க்கின் பங்கும் முக்கியமானது. அடுத்து இங்கிலாந்து படை டச்சு நோக்கி வருவதை எதிர்கொள்ள இவர் ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு முன்னோக்கி சென்றார். ஆனால் அரசவையில் இருந்த பெரும்பாலானோருக்கு இது பிடிக்கவில்லை.

சில வீரர்களை கொண்டு கோம்பன் என்ற இடத்தில் போர் நடத்திக் கொண்டிருந்த அவரை இங்கிலாந்து வீரர்கள் பிடித்து சென்றனர். இதற்கு உடந்தையாக சில பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. பிடித்து செல்லப்பட்ட வீரமங்கையை இங்கிலாந்து இராணுவம் சூனியக்காரி எனற பட்டத்துடன் 1431 மே 30 இல் உயிரோடு தீ வைத்து கொளுத்துகிறது. பின்னாட்களில் பிரான்ஸ் அரசு நடந்த தவறை சரிசெய்ய அவரை புனிதராக அறிவிக்கவும் செய்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கையில் ஜோன் ஆஃப் ஆர்க் புனிதராக இருந்தாலும் அவரின் ரத்ததில் அன்றைக்கு சொந்த நாடு என்ற வெறியும் சொந்த மண், இதை எவனும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற வெறியுமே அதிகமாக இருந்ததாகவும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz