இந்திய அணியின் தேர்வு சரியா? படுதோல்விக்குப் பிறகு விளக்கம் அளித்த கிரிக்கெட் கேப்டன்!

உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2 ஸ்பின் பந்து பவுலர்கள் இடம்பெற்றது குறித்துத் தற்போது ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்திய அணியின் படுதோல்விக்கு இந்த முடிவே காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2 ஸ்பின் பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெற்றது சரியான முடிவுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டனில் உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 2 வருடங்களாகப் பெற்ற புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் நியூசிலாந்து அணியும் இந்தியக் கிரிக்கெட் அணியும் மோதிக்கொண்டன.

ஆனால் கடந்த ஜுன் 18 ஆம் தேதி போட்டி துவங்கியதில் இருந்தே சவுதாம்ப்டனில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் முதல்நாள் போட்டி கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் போட்டியும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் பந்து ஸ்விங் ஆகும் நிலையும் அதிகமாகவே இருந்தது. இதனால் நியூசிலாந்து அணியின் கை ஓங்கியும் இந்திய அணி தொடர்ந்து வீழ்ச்சியையும் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கொடுக்கப்பட்ட ரிசர்வ் நாளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு 2 ஸ்பின் பந்து பவுலர்களை சேர்த்தது தவறு என்பது போன்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு விளக்கம் அளித்த கேப்டன் விராட் கோலி அவர்கள், சவுதாம்ப்டன் போன்ற சீதோஷ்ண நிலைக்கு வேகப்பந்து வீச்சு, ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணியை வைத்து நங்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு எதிராக வெற்றிப்பெற்று இருக்கிறோம். இதனால் எங்கள் பேட்டிங்கின் ஆழமும் அதிகரித்து இருக்கிறது. அதனால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது சரியான முடிவுதான். போட்டியில் இன்னும் நிறைய நேரம் இருந்திருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த இந்த விளக்கம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.