கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… தமிழக அரசு அதிரடி!!!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு துரித நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4.5% லட்சத்தை தாண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி இருக்கும்போது தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியிருப்பதாகத் தமிழகச் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் நேற்று ஒரே நாளில் 5,799 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 912 ஆக குறைந்து இருக்கிறது.

மேலும் சென்னையில் நேற்று ஒரேநாளில் 991 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 583 ஆக உயர்ந்து இருக்கிறது என்ற அச்சம் ஏற்பட்டாலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 155 ஆக உயர்ந்து இருக்கிறது என்பதையும் தமிழக சுகாதாரத்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. தற்போது சென்னை மாநகரில் 10 ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் 53 பேர் உயிரிழந்தனர் என்ற நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 434 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாலும் விரைவில் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப் படுகிறது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களது உடலை அடக்கம் செய்யும்போது அவர்களது உடலுக்கு அவமரியாதை செய்தால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத் திருத்தத்தைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. சுகாதார சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத் திருத்தத்தால் கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு அவமரியாதை செய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன்படி இப்புதிய சட்டத்தை மீறுவோர் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு குறையாமல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் ரூ.10 ஆயிரத்துக்கு குறையாமல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும என்றும் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.