ஊரடங்கின்போது வாகனத்தில் சென்றால் பறிமுதல் செய்யப்படுமா? டிஜிபி திரிபாதி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவரும் நிலையில் நாளை அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கின்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்றும் எந்தவிதமான வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை, மருந்தகம், ஊடகம் ஆகியவைகளில் பணிபுரிபவர்கள் மட்டும் வாகனங்களில் செல்லலாம் என்றும் அதற்குரிய அடையாள அட்டையை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்கள் கைப்பற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள்ர. இதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு விதி மீறலுக்கான வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என்றும் ஒருவேளை கைப்பற்றினாலும் சிறிது நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வாகன உரிமையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்றாலும் பாதுகாப்பு கருதி ஊரடங்கின்போது வாகனத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.