இந்திய அணியில் இடமில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: சூர்யகுமார் யாதவ்வுக்கு அழைப்பு

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ்வின் அதிரடி ஆட்டம் தான் மும்பை அணியின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்து வந்தாலும் இன்னொரு பக்கம் சூர்யகுமார் யாதவ் தனியாளாக 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனை அடுத்து சூர்யகுமார் யாதவ்வுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் சூர்யகுமார் யாதவ் பெயர் மூன்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சூரியகுமார் யாதவ் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டின் ஸ்காட் ஸ்டைரீஸ் என்பவர் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டால் சூர்யகுமார் யாதவ் தாராளமாக நியூசிலாந்து அணிக்காக விளையாடலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருப்பவர் வில்லியம்சன் என்பதும் அவர் உலகக் கோப்பையை நூலிழையில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ்வை இந்திய அணியில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காவிட்டால் நியூசிலாந்தின் அழைப்பை ஏற்று நியூசிலாந்து அணிக்காக விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்