இந்த அப்பளம் கொரோனா வைரஸை தடுக்க உதவும்- சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பா.ஜ.க அமைச்சர்!!!

 

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய அப்பள நிறுவனத்தின் தயாரிப்பை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அமைச்சரின் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிரில் என்ற பகுதியில் அமைந்திருக்கும் பாபாஜி அப்பளம் என்ற புதிய நிறுவனத் தயாரிப்பை அறிமுகப் படுத்தி வைத்தபோது அமைச்சர் வெளிப்படுத்திய கருத்துத்தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் பாபாஜி அப்பளம் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலில் உண்டாக்கும் தன்மை உண்டு எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்த வீடியோவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

“பிகானிரில் தயாரிக்கப்படும் அப்பளங்கள், பூஜியா மற்றும் ரசகுல்லா ஆகியவை மிகவும் பிரபலமானவை. #Vocalfor Local பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஊரில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து பேசி இந்த பிரச்சாரத்தை மேலும் விரிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசிய வீடியோ டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப் பட்டு இருக்கிறது.

இக்கருத்து அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படாதது என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் விவகாரத்தில் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை யாரும் பகிர வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சர் இப்படி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது. வெளிநாட்டு தயாரிப்புகளை நம்பியிருக்க வேண்டாம் என இந்தியா தற்போது தற்சார்பு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் சொந்த தயாரிப்புகளுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் கொரோனா வைரஸுடன் ஒப்பிடத்ததுதான் தற்போது பெரும் தவறாக மாறியிருக்கிறது.