இதைக் கொடுக்க எதற்கு கமல் - மணி - ரஹ்மான் கூட்டணி - தக் லைஃப்!
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் , ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் " நாயகன் " படத்திற்குப் பிறகு 38 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் தக் லைஃப் . சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒரு துப்பாக்கிச் சூட்டில் தந்தையை இழக்கிறார் அமரன் ( சிம்பு) அவரைக் காப்பாற்றுகிறார் ரங்கராய சக்திவேல் நாயக்கர்( கமல் ஹாசன்). தனது பிள்ளை போல் வளர்க்கிறார். டில்லியை ஆட்டி படைக்கும் கேங்ஸ்டர் குடும்பம். அத்தனை இடங்களிலும் தனக்கு பிறகு அமரன் தான் என முன்னிறுத்துகிறார் சக்திவேல் நாயக்கர். அதன்படி ஒரு கட்டத்தில் சக்திவேல் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட மொத்த சாம்ராஜ்யத்தை எடுத்து நடத்துகிறார் அமரன். ஒரு சில முக்கிய ஆலோசனை மற்றும் முடிவுகளில் கூட சக்திவேல் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் அமரன் மற்றும் அவரது குழு. இதற்கிடையில் உனது தந்தையை கொலை செய்தது சக்திவேல் தான் என அமரனுக்கு தகவல் வர பழி தீர்க்க நினைக்கிறார். சக்திவேல் அமரன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது. முடிவு என்ன என்பது மீதிக்கதை.
கமல் ஹாசன் ... நடிப்பில் அரக்கன் எனில் சிம்பு ராட்சசன். இருவரும் இணைந்து கதையில் மட்டுமல்ல கதாபாத்திரத்தில் கூட நீயா நானா என போட்டி போட்டு நடிக்கிறார்கள். அன்பனாக கணவன், ஆளை சுண்டி இழுக்கும் காதலன், அப்பா, அண்ணன் என அத்தனைக்கும் இப்பவும் ஈடு கொடுக்கிறார் கமல் .
சிம்பு .. சில இடங்களில் கமல்ஹாசனையே மிஞ்சும் நடிப்பைக் கொடுத்து கதையிலும் பல இடங்களை தாங்கிப் பிடிக்கிறார். அபிராமி மற்றும் த்ரிஷா இருவருக்குமே போட்டி போட்டு நடிக்க வேண்டிய கதாபாத்திரம். மிக அற்புதமாகவே நடித்திருக்கிறார்கள். அடுத்தபடியாக நாசருக்கு வலிமையான கதாபாத்திரம். மற்றவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் சிறியது என்றாலும் மணிரத்னம் - கமல் படம் என்பதால் பொறுப்பாக பத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்து முதல் 20 நிமிடங்கள் நடக்கும் துப்பாக்கி சூடு காட்சிகளும் அது படமாக்கப்பட்ட விதமும் நம்மை மொத்தமாக கட்டிப்போடும். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கமல் ஹாசன், மணிரத்னம், ஏ. ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி இணையும் போது நிச்சயம் எதிர்பார்ப்பு எகிறும். ஆனால் அதற்கான பிரம்மாண்ட கதையாக்கத்தை கொடுக்கவில்லை என்பதுதான் சற்று ஏமாற்றம். பழைய அதிலும் சுலபமாக யூகிக்க கூடிய கதை. திரைக்கதையிலும் புதிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லை. விசுவல் மற்றும் மேக்கிங் அருமை. ரஹ்மான் பின்னணி இசை பல இடங்களில் பலம். கதை சொல்லலாகவே படம் அங்காங்கே தொடர்ச்சி இல்லாமல் காட்சி காட்சியாக நிற்கிறது. கமல்ஹாசன் மற்றும் சிம்பு கதாபாத்திரம் தான் கதையின் அடிப்படை நாதம் என் கையில் அதில் தெளிவு இருக்க வேண்டாமா. அவ்விரு கதாபாத்திரங்களின் உறவுக்கு மத்தியிலேயே ஏராளமான குழப்பங்கள்.
ரவிக்கு கே சந்திரன் ஒளிப்பதிவில் படத்தின் விதவிதமான காலகட்டங்கள், நேபாளம், கண்களுக்கு மிகப்பெரிய விருந்து. அன்பறிவு மாஸ்டர்களின் உருவாக்கத்தில் சண்டைக் காட்சிகளும் பிரமாதம். ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்தினம் கூட்டணி தான் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பு 9 பாடல்களை வெளியிட்டு அத்தனையும் விசுவலாக எப்படி இருக்க போகிறது என நினைத்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கும். முந்தைய படங்களில் பாடல்களை ஆங்காங்கே கட் செய்துவிடும் மணிரத்னம் இந்த படத்தில் மொத்தமாகவே தூக்கிவிட்டார். அஞ்சு வண்ணப் பூவே பாட்டு மட்டும்தான் ஆங்காங்கே ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் லேசாக ஆரம்பிக்கும் முன்பே ஆப் செய்யப்படுகிறது. இதற்கு சின்மயி பெரிதா தீ பெரிதா என விவாத மேடைகள் வேறு. யூடியூபில் பார்த்த ஜிங்குச்சா பாடல் மட்டும் முழுமையாக ஓடி முடிகிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் படு ஷார்ப். அதனால் தான் ஓரளவிற்கு தப்பித்தோம்.
மொத்தத்தில் , மணிரத்னம் கமல்ஹாசன் ஏ.ஆர். ரகுமான் என எதிர்பார்த்து ஏமாறாமல் இதுவும் ஒரு படம் என நினைத்து சென்றால் ஓரளவுக்கு தப்பிக்கலாம். இல்லையேல் கம்பெனி பொறுப்பாகாது .
Rating: 2.5 / 5.0
Showcase your talent to millions!!
தமிழ் Movie Reviews






Comments