சூப்பர் ஹீரோக்களும் சாதாரண மனிதர்கள்தான்… வகுப்பெடுக்கும் ‘தண்டர்போல்ட்ஸ்’ !
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , ஜாக் ஷ்ரெயர் இயக்கத்தில் MCU உலகில் புதுமையான ஒரு சூப்பர் ஹீரோ குழுவின் கதை. ஃப்ளோரன்ஸ் பியூ, செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், வயட் ரஸ்ஸல், ஓல்கா குரிலென்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘தண்டர்போல்ட்ஸ்’ .
அமெரிக்க மத்திய ஏஜெண்ட்கள் குழுவின் (CIA) இயக்குனர் வலெண்டினாவிடம் வேலை செய்கிறார் எலேனா பெலோவா (ஃப்ளோரன்ஸ் பியூ) . எனக்குப் புகழ் கொடுக்கும் சூப்பர் ஹீரோ பாணியிலான வேலை கொடுங்கள் என்கிறார் ரெட் ரூமில் பயிற்சி எடுத்துக்கொண்ட ஒயிட் விடோவின் சகோதரி எலனா. எனவே அவருக்கு ஒரு மிஷன் கொடுக்கப்பட்டு வால்ட்க்கு அனுப்பி வைக்கிறார் வலெண்டினா. ஆனால் அங்கே பக்கி பார்ன்ஸ் (செபாஸ்டியன் ஸ்டான்), ஜான் வாக்கர் (வயட் ரஸ்ஸல்), டாஸ்க்மாஸ்டர் (ஓல்கா குரிலென்கோ), கோஸ்ட் (ஹன்னா ஜான்-கேமன்) உள்ளிட்டோரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்காக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் வால்ட்டின் மர்மமான ஒரு பெட்டியிலிருந்து வெளி வருகிறார் பாப் (லூயிஸ் புல்மன்). தன்னுடைய குற்றங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு சக்திவாய்ந்த அடியாளாக பாபை உருவாக்கியிருக்கிறார் வலென்டினா எனத் தெரிந்து சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து தப்பிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருமே பழைய மார்வல் சூப்பர் ஹீரோக்கள் போல் சக்திவாய்ந்தவர்களாக , வெற்றியாளராக இல்லாமல் மனக்குழப்பம், தனிமை, வெறுப்பு உள்ளிட்டப் பிரச்னைகளில் உளவியல் ரீதியாக சிக்கியிருக்கிறார்கள். இதனால் சேர்ந்து பணியாற்றுவதில் சிக்கல் உண்டாகிறது. இவர்கள் ஒன்றிணைந்து எப்படி புதுக் குழுவான ‘ தண்டர்போல்ட்ஸ்‘ உருவானது? பாப் ஏன் உருவாக்கப்பட்டான், அவன் சக்தி என்ன என்பது மீதிக்கதை.
மற்ற மார்வெல் யுனிவர்ஸ் சூப்பர் ஹீரோக்கள் போல் பவர், பாராட்டுகள் , வெற்றி, வில்லனை அழிக்கும் யுக்தி இதெல்லாம் எதுவும் இல்லாமல் உணர்வுகளிலேயே பயணிக்கிறது. அத்தனை பேரும் ஆக்ஷனைக் காட்டிலும் எமோஷனில் அதிகம் ஸ்கோர் செய்ய வேண்டியக் கட்டாயம் இருக்கும் சூப்பர் ஹீரோ படம். ஃப்ளோரன்ஸ் பியூ, எலேனா கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சகோதரியின் கொலை, அதனால் தனிமை, ஏமாற்றம் என பல உணர்வுகளைக் கொடுக்க வேண்டிய முக்கிய முதன்மைக் கதாபாத்திரம் அவருக்குதான். அவரது கண்களில் தெரியும் வலியும், கோபமும்தான் மற்ற ஹீரோக்களையும் தூண்டி, ஒன்றிணைக்கிறது. செபாஸ்டியன் ஸ்டான், தனது பழைய கசப்பான அனுபவங்களை சுமந்துகொண்டு அதனுடன் போராடுகிறார். படத்தின் மையக்கரு பாப்/வாய்ட்/சென்ட்ரியாக வரும் லூயிஸ் புல்மன் தான். இவரின் கதாபாத்திரம் வரவிருக்கும் ‘அவஞ்சர்ஸ்: டூம்ஸ் டே‘ படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் எனத் தெரிகிறது. மனிதர் அழுகை, சோகம், வெறுப்பு, இயலாமை, என அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடம் அப்ளாஷ் வகை.
இயக்குனர் ஜேக் ஷ்ரெயர், இந்தக் கதையை மற்ற சூப்பர் ஹீரோக்கள் படமாக இல்லாமல் உணர்வுப்பூர்வமாகக் கையாண்டிருக்கிறார். சூப்பர் ஹீரோக்கள் முதலில் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், மனக்குழப்பங்களையும் ஒழித்தால்தான் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும். எதிலும் ஒற்றுமை அவசியம் என்கிற கருத்தையும் வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் தான் மார்வெல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தடுமாறுகிறது. ஆண்ட்ரூஸ் ட்ரோஸ் பாலெர்மோ ஒளிப்பதிவில் மொத்த நகரமும் இருள் சூழும் காட்சி அருமை. சண்டை காட்சிகள் அளவாக இருப்பினும் மார்வெல் யுனிவர்சில் இது புது முயற்சியாக வரவேற்கலாம். சன் லக்ஸ் பின்னணி இசையும் ஆக்ஷனுக்கு அதிரடி சேர்த்திருக்கிறது.
எப்போதுமான மார்வெல் ஸ்டைல் படம் இல்லை என்பதாலேயே நிச்சயம் சின்ன ஏமாற்றம் உண்டாகும். குறிப்பாக ‘கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வோர்ல்ட்‘ திரைப்படமும் மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத நிலையில் இப்படமும் சில இடங்களில் அதன் டிரேட் மார்க் ஆக்ஷன் டெம்ப்ளேட்கள் இல்லாமல் சிலரை சோதிக்கலாம்.
மொத்தத்தில் சூப்பர் ஹீரோக்களே ஆனாலும் மனதில் குழப்பங்கள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் உண்மையான ‘அவெஞ்சர்ஸ்‘ என்னும் வித்யாசமான உணர்வுப் படமாக மாறியிருக்கிறது இப்படம். சூப்பர் ஹீரோக்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் குடும்பப் பிரச்னை, மன அழுத்தம், குற்ற உணர்வு இவை எல்லாம் இருக்கும் என சொல்லி மார்வெல் உலகிலும் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது இந்த ‘தண்டர்போல்ட்ஸ்‘.
Comments