Download App

Thuppakki Munai Review

துப்பாக்கி முனை :  கூர்மையான முனை

நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம்முடைய பெயர் எழுதியிருக்கும் என்பதுபோல் ஒவ்வொரு தோட்டாவிலும் ஒரு கிரிமினலின் கதை இருப்பதாக எண்ணும் மும்பை போலீஸ் அதிகாரியான விக்ரம் பிரபு, ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். கொடூர குற்றவாளிகளை இரக்கமின்றி கொல்வதால் அவருடைய அம்மாவே அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் இராமேஸ்வரத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மாவோயிஸ்ட் ஒருவனை குறித்த தகவலை விக்ரம் பிரபுவுக்கு அளிக்கும் உயரதிகாரிகள், விக்ரம்பிரபுவிடம் அந்த வழக்கை கொடுக்கின்றனர். இதற்காக ராமேஸ்வரம் வரும் விக்ரம்பிரபு, உண்மையில் அந்த நபர் குற்றவாளி இல்லை, அப்பாவி என்பதை கண்டுபிடிக்கின்றார். உண்மையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்கும்போது அவருக்கு அதிர்ச்சியும் ஆபத்துக்களும் ஏற்படுகிறது. இதனை அவர் எவ்வாறு எதிர்கொண்டார், இந்த வழக்கை அவர் எப்படி முடித்தார் என்பதுதான் மீதிக்கதை

போலீஸ் கேரக்டருக்கு குறிப்பாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கேரக்டருக்கு விக்ரம்பிரபு மிகச்சரியாக பொருந்துகிறார். தான் கொலை செய்யவில்லை, சமூகத்தை சீரழிக்கும் களைகளை பிடுங்குவதாக அம்மாவுக்கும் காதலி ஹன்சிகாவுக்கும் புரிய வைக்க முடியாமல் திணறுகிறார். ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். மொத்தத்தில் விக்ரம்பிரபுவுக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாகவே இருக்கும்

வழக்கம்போல் நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் ஹன்சிகாவுக்கு. ஹன்சிகாவின் நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை

எம்.எஸ்.பாஸ்கர் மீண்டும் ஒருமுறை தான் ஒரு மிகச்சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். தன்னுடைய செல்ல மகளை பாழாக்கி கொடூரமாக கொலை செய்த கயவர்களை விக்ரம்பிரபுவின் உதவியுடன் கண்டுபிடிப்பதும், கண்டுபிடித்தவுடன் அவர் எடுக்கும் அதிரடி முடிவும் சூப்பர்.

இராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு டெல்லி அரசியல் வரை செல்வாக்கு பெற்ற வில்லன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி. வழக்கம்போல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். 

முத்துகணேஷ் இசையில் டூயட் பாடல் இல்லாதது நிம்மதியை தருகிறது. ஒரு ஆக்சன் படத்திற்கேற்ற பின்னணி இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக சேசிங் காட்சிகளில் அபாரம்

ராமேஸ்வரத்தின் அழகை ராசமதியின் கேமிரா அற்புதமாக படம்பிடித்துள்ளது. மணல்வெளியில் விக்ரம்பிரபுவை கார்களால் வில்லன் குரூப் சுற்றி வளைக்கும் காட்சி அற்புதம்

இந்த படத்தின் கதைக்கு ஹன்சிகாவின் காதல் காட்சிகளும் அம்மா செண்டிமெண்ட் காட்சிகளும் தேவையில்லாதது. எடிட்டர் அவற்றை கட் செய்திருக்கலாம்.

இயக்குனர் பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை எழுதிய செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் தான் இந்த படத்தின் இயக்குனர். ஒரு பிரச்சனைக்கு என்கவுண்டர் என்பது தீர்வாகாது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பது பகையை மேலும் மேலும் வளர்க்கும். சட்டத்தின் துணை கொண்டு தான் குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்ல வந்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். செண்டிமெண்ட், ரொமான்ஸ் இன்றி முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் சொல்ல வேண்டிய கதையை கமர்சியலுக்காக சமரசம் செய்துள்ளார் இயக்குனர். இருப்பினும் திரைக்கதையில் ஆங்காங்கே டுவிஸ்ட், திருப்புமுனை ஆகியவை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட நபரை விக்ரம்பிரபு தப்பிக்க வைக்கும் ஒருசில முயற்சிகளில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இறுதியில் தான் சொல்ல கருத்தை எம்.எஸ்.பாஸ்கரின் வசனங்கள் மூலம் அழுத்தமாக கூறி, சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? என்பதை விளக்குவதோடு, சமீபத்தில் நடந்த பாலியல் குற்றங்களையும் சுட்டிக்காட்டுகிறார். 

மொத்தத்தில் ஆக்சன் பிரியர்களை இந்த படம் நிச்சயம் கவரும்

Rating : 2.8 / 5.0