தொழிலாளர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அன்றாட தொழிலாளி முதல் மாத வருமானம் உள்ளவர்கள் வரை அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதால் யாருக்கும் வருமானமின்றி செலவுக்கு கூட காசில்லாமல் கோடிக்கணக்கானோர் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை 1ஆம் தேதி பிறப்பதால் வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை வாடகைக்கு இருக்கும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சாப்பாட்டுக்கே திண்டாட்டமாய் இருக்கும் பலர் வாடகையை எப்படி கொடுப்பது? என்ற அச்சத்தில் உள்ளனர்

இந்த நிலையில் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற உத்தரவு தமிழகத்தில் வருமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்து வந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர்களிடம் வீட்டு வாடகை கேட்டுக் கட்டாயப்படுத்தும் வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள வாடகைக்கு குடியிருப்போர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் அரசின் உத்தரவை அனைத்து வீட்டு உரிமையாளர்களும் கடைபிடிப்பார்களா? என்பது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டு வாடகை தவிர வேறு வருமானம் இன்றி இருக்கும் வீட்டின் உரிமையாளர்களின் நிலையும் பரிதாபமானது என்பது குறிப்பிடத்தக்கது