அஜித்தின் அறிக்கையை பாராட்டிய அதிமுக, திமுக, காங்கிரஸ் தலைவர்கள்
- IndiaGlitz, [Tuesday,January 22 2019]
அரசியல் குறித்த தனது நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம், தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் விழுந்துவிட கூடாது என்ற அக்கறை ஆகிய அனைத்தும் நேற்று அஜித் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கையில் இருந்தது. கடந்த சில நாட்களாக ரஜினி குறித்தும், 'பேட்ட' குறித்தும் நெகட்டிவ் கருத்துக்கள் பதிவாகி வந்த நிலையில் அஜித்தின் இந்த அறிக்கை வெளியானவுடன் நேற்றிரவு முதல் எந்த ஒரு நெகட்டிவ் கருத்தும் பதிவாகவில்லை என்பது அஜித்தின் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே திமுக் எம்பி கனிமொழி பாராட்டிய நிலையில் தற்போது அதிமுக பிரமுகரும் தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயகுமார் அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 'நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்; அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது; திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல் பிரபல காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கூறியபோது, 'ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத் தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின் தெளிவு மரியாதைக்குரியது. 'தல' எப்போதும் ஒரு தனிரகம்! என்று கூறியுள்ளார்.
ஒரு நடிகரின் அறிக்கையை அதிமுக, திமுக, காங்கிரஸ் என எதிரெதிர் கொள்கையுடன் இருக்கும் கட்சிகள் பாராட்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது